Header Shelvazug

http://shelvazug.com/

மன்னர்களை புகழந்த புரட்சியாளர்கள்!

வரலாற்றையும் அதன் நாயகர்களையும் மதிப்பீடு செய்யும்போது...
ஒரு அமைப்பை அல்லது ஒரு கருத்தியலை மற்றும் தனி மனிதர்களை மதிப்பீடு செய்யும்போது அவைகள் அல்லது அவர்கள் செயல்பட்ட காலத்திய நிலைமைகளுடன் பொருத்திப் பார்த்து மதிப்பீடு செய்ய வேண்டும். இதுபற்றி தோழர் மா.வோ கூறும்போது மீனை நீரில் வைத்து தான் பார்க்க வேண்டுமே தவிர தரையில் வைத்து அல்ல என்பார்.. இன்று நாம் வாழும் சமூகத்தின் பௌதிக நிலைமைகளை வைத்தோ, வளர்ந்துவிட்ட இன்றைய மனித உணர்வுகளின் அடிப்படையில் கொண்டோ கடந்தகாலத்தை இயந்திர கதியில் பொருத்திப் பார்க்கக் கூடாது. அது அறிவியலும் அல்ல அறிவு சார்ந்த பார்வையும் அல்ல..

அக்காலத்தில் வலிமை வாய்ந்த பேரரசுகளில் முகாமையாக விளங்கிய சோழப்பேரரசின் மாமன்னன் ராஜராஜ சோழன் பற்றி புதிய இயக்குனர் ஒருவர் கூறிய கருத்துக்கள் எந்த அடிப்படையும் ஆதாரமமும் அற்றவை என்பதை கல்வெட்டு ஆய்வாளர்களும், அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்களும், தொல்லியல் நிபுணர்களும், மறுத்து பேசியும் எழுதியும் வருகின்றனர்.  இதில் நாம் அதிகம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மரக்கலங்களை கடலில் செலுத்தி யானைப் படைகளையும், குதிரைப் படைகளையும், பெருமளவு ஆயுதங்களையும், ஆயிரக்கணக்கான வீரர்களையும் ஏற்றிக்கொண்டு கடல் வழியில் மேற்கு ஆசியா மற்றும் கிழக்கு தெற்கு ஆசிய நாடுகளில் படையெடுப்பு நடத்தி வெற்றிகளை மட்டுமே கொண்டவர்கள் சோழ மன்னர்கள்.

 வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் தமிழர்களின் வரலாற்று சின்னங்களையும் தமிழர்களின் ஆன்மீக அடையாளங்களையும் நிறுவி வைத்து விட்டு வந்தவர்கள்.

 இன்றும்கூட அதனுடைய அடையாளங்கள் வரலாற்றுக் குறிப்புகள் அந்நாடுகளில் இருக்கின்றன. வெற்றி கொள்ளப்பட்ட அந்நாடுகளில் அந்த மண்ணை அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து தங்கிவிடவில்லை. மாறாக அதை விட்டு விட்டு வெளியேறி வந்தவர்கள். அக்காலத்தில் வளர்ந்து வந்த கடல் வணிகம், அப்போதைய கடல் கொள்ளையர்களால் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிய போது சோழப் பேரரசர்களிடம் தங்களது வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி வேண்டுகோள் வைத்தார்கள். பன்னாட்டு வணிக கப்பல்களுக்கு, சோழ கடற்படைகள் பாதுகாப்பளித்து வந்தனர்.

 பூம்புகார், நாகை, கடலூர் மற்றும் பொற்க்கை துறைமுகங்களில் பிறநாட்டு வணிகக் கப்பல்கள் மாதக்கணக்கில் தங்கி நின்று சரக்குகளை இறக்கி தமிழகத்தில் உள்ள சரக்குகளை ஏற்றி மிகப்பெரும் கடல் வாணிபம் நடைபெற்று வந்தது. அந்த சமகாலத்தில் உலகில் வேறு எந்த நாட்டு மன்னர்களிடமும் இத்தகைய மிகப்பெரும் கடல் வழியில் வர்த்தகம் நடைபெற்றதற்கான சான்றுகள் இல்லை. அத்தகைய பெருமை படைத்தவர்கள் சோழப் பேரரசு அதன் மாமன்னர்கள்.

 அன்றைய இந்திய உப கண்டத்தின் வடக்குப் பகுதியில் பாரசீகர்கள் மற்றும் முகலாயர்கள் படையெடுப்புகள் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்தது. அத்தகைய படையெடுப்புகள் தெற்குப் பகுதியில் குறிப்பாக தமிழ் பகுதிகளில் வரவிடாமல் தடுத்த பெருமையும் சோழப் பேரரசர்களையே சாரும்.

வடக்கே ஏற்பட்ட  முகலாய படையெடுப்புகள் தான், அவர்களின் ஆக்கிரமிப்புகள் தான் இன்று வரை இந்துத்துவா அடிப்படைவாத சக்திகளின் சித்தாந்த பலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் தெற்கில் இந்துத்துவா அத்தகைய செயல்பாடுகளை நிறுவ முடியாமல் போனதற்கான வரலாற்று பெருமை தமிழ் மன்னர்களின் குறிப்பாக சோழப் பேரரசர்களின் வலிமையே காரணமாக உள்ளது.

 தமிழ் தேசிய அரசியல் 1990-ம் ஆண்டுகளுக்குப் பிறகு தெளிவான கருத்துக்களையும், அதற்கேற்ற அமைப்புகளையும் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதன் வேர்கள் நம்முடைய முன்னோடிகள் மற்றும் பண்டைய தமிழர்களின் அறம் சார்ந்த வாழ்வியலின் வேர்களிலிருந்து நமக்கு கிடைத்தது. இன்று வளர்ந்து வரும் தமிழ்த் தேசியத்திற்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் பலமுனை தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

வரலாறு முன்னேறி வளர்ந்து செல்லும் போது சில அழுக்கு மூட்டைகளையும் சுமந்து கொண்டு தான் முன்னேறும். அதுபோலவே தவறே செய்யாத மனித மூளையோ, மனிதனோ அல்லது எந்த ஒரு அமைப்பும் இருக்க முடியாது. எல்லா மனித உடல்களுமே, மலங்களை சுமந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே அக்கால கட்டங்களில் ஏற்பட்ட தீமைகள், பெண்ணடிமைத்தனம், அடிமை முறைகள், மனிதர்களுக்கிடையே பாகுபாடுகள் இருக்கவே செய்யும். அது இன்றும் கூட தொடர்கிறது. மனித சமூகம் பல்வேறு கட்டங்களை தாண்டி வளர்ந்து வரும் பொழுது தீமைகளின் மிச்ச சொச்சங்களும் ஒவ்வொரு சமூக  அமைப்புகளுக்குள்ளும்  வந்துகொண்டேதான் இருக்கும். ஆக அவைகளை களைந்து மனித சமத்துவத்தை நோக்கி வளர்வதற்கு தேவையான கருத்துக்களையும், அமைப்புகளையும் தேர்வு செய்து கொள்ள வேண்டும். தற்போது எச். ராஜா போன்றவர்கள் இந்துத்துவ தீவிரவாத தலைவர்களிலேயே தான் தான் முதன்மையானவர் என்பதை காட்டிக் கொள்ள வெறித்தனமான இழிவான சொற்களை பேசுவது போல, ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் முதன்மைத் தலைவராக தீவிர செயல்பாட்டாளராக தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள முயலும் இரஞ்சித் போன்றவர்கள் செயல்பாட்டை  அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் வரலாறு எழுதப்படும்போது எழுதுபவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை மையப்படுத்தி தங்களுடைய வக்கிர எண்ணங்களை சேர்த்து எழுதுவது உண்டு. மார்க்சிய அறிஞரும் ஆய்வாளருமான டாக்டர் ரொமிலா தாப்பர் கூறும்போது, 'வரலாற்றை எழுதுபவர்கள் தங்களுடைய அக நிலை விருப்பு வெறுப்புகளையும் இணைத்து வக்கிர கண்ணோட்டத்துடன் எழுதுவார்கள்' என்பார். இன்றைய தமிழகச் சூழலில் தமிழ் தேசியம் பரந்துபட்ட மக்களிடம் வளர்ந்து வருவதை கண்டு இந்துத்துவ இந்திய தேசியம் மட்டுமல்ல இந்திய தேசியத்தின் இரட்டை குழந்தைகளான திராவிடமும் மார்க்சிஸ்ட் கட்சியும் தமிழர்களின் பெருமைகளை சிதைத்துவிட அல்லது சிறுமைப்படுத்தி விட பெரும் முயற்சி செய்து வருகின்றன.

மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன் கூறுகிறார்.. 'தமிழர்களின் கடைச் சங்க காலத்திலேயே சாதியம் மற்றும் வருணாசிரமம் இருந்ததாக கூறுகிறார். இக்கட்சி பிறக்கும் பொழுதே (1964 அக்டோபர்) தமிழர் விரோத கொள்கையுடன் பிறந்த கட்சியாகும். 64 டிசம்பரில் தோன்றிய இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற தமிழக மக்களின் போராட்டத்தை எதிர்த்தவர்கள் அக்கட்சியே. அது மட்டுமல்ல 70-களில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டம் முல்லைப் பெரியாறு அணை இப்படி பல்வேறு தமிழர்களின் போராட்டத்தை எதிர்த்து வந்தவர்கள் அவர்கள். மேலும் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக தாயக மீட்புப் போரை நடத்தி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கு இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்று கூறியதும் அக்கட்சி தலைவர்கள் தான்.

மாமன்னர் ராஜராஜ சோழனின் பெருமைகளை சிறுமைப்படுத்தி கூறி வரும் திராவிட கருத்தியலாளர்களும் இவர்களுடன் தற்போது சேர்ந்து தமிழர் வரலாற்று மரபை வசைபாடி வருகின்றனர்.

2009ஆம் ஆண்டு ஈழத்தில் தமிழின அழிப்பு நிகழ்ந்தபோது அக்காயத்தில் இருந்து வெளிப்பட்ட நாம் தமிழர் கட்சியும் அதன் தலைவர் சீமானும் தோன்றினர். சீமான் அவர்களின் தமிழ் தேசிய பரப்புரைகள் சாமானிய தமிழ் மக்களிடம் கூட  அவர்களின் நெஞ்சை தொடுவதால் தமிழ் தேசிய அரசியல் ஒரு வெகு மக்கள் இயக்கமாக வளர்ந்து வருவது கண்டு இவர்கள் அஞ்சுகிறார்கள் காழ்ப்புணர்வு கொள்கிறார்கள்.

தமிழ் தேசிய அரசியலின் ஒரு தேவையாக எழுந்து வந்த அக்கட்சியும் அதன் தலைவரையும் இழிவு படுத்தி வருகிறார்கள். இறுதியாக எந்த ஒரு மக்கள் இனமும் தங்கள் நாட்டின் முன்னோடிகளான மாமன்னர்களையும் அவர்களது பெருமைகளையும் கொண்டாடுவது வழக்கமான ஒன்று. சீனப் புரட்சியின் நாயகன் மாவோ அவர்களது அறையில் செங்கிஸ்கான் மன்னனின் படம் இடம் பெற்றிருந்தது. செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியர் படையெடுப்பு என்பது உலகத்தின் நாசகரமான படையெடுப்புகளில் ஒன்றாகும். அவர்களின் படைகள் சென்ற பாதைகள் யாவும் சுடுகாடுகளாகவே இருக்கும்.

அன்றைய ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை மட்டும் இரண்டு முறை எரித்துச் சாம்பலாக்கியவர்கள் செங்கிஸ்கான் தலைமையிலான படைகள். அதுபோலவே கிரேட் பீட்டர் என்ற ரஷ்ய மன்னனை பழமைவாதத்தை சுட்டெரிக்க வந்த மன்னன் என்று ஸ்டாலினும் லெனினும் புகழ்வார்கள். ரஷ்ய வரலாற்றில் கிரேட் பீட்டர் மகத்தானவர்.

இது போலவே தான் சோழப் பேரரசர் ராஜராஜ சோழனும் நீர் மேலாண்மையை நில அளவை காரியங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய மாமன்னன். 2000 ஆண்டுகளாகியும் கல்லணை இன்றும் நிலைத்திருப்பது சோழப்பேரரசின் பெருமைக்குச் சான்றாகும். எனவே தமிழர்களை இழிவுபடுத்துவதாக எண்ணி அக்காலத்திய தமிழ் மன்னர்களின் சில குறைபாடுகளை பெரிதாக்கி காட்ட முயல்வது அருவருக்கத்தக்க ஒன்றாகும். கொடிய மிருகங்கள் ஆன சிங்கம் புலி போன்ற மிருகங்கள் வாழும் காடுகளில் தான் மான்களும் முயல்களும் வாழ்ந்து வருகின்றன. அதுபோலவே பூனைகள் வாழும் இடங்களில் தான் எலிகளும் வாழ்ந்து இனவிருத்தி செய்கின்றன. எனவே தமிழ் இன விரோத இந்த சக்திகளை எதிர்த்து போராட இன்றைய தமிழ் இளம் தலைமுறையினர் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சாதி ஒழிப்பை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தேசிய விடுதலைக்கு உழைப்போம் என உறுதி ஏற்போம்.

 -  வைகை கருப்பையா-
      தமிழகம்

No comments