சாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...

நடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகளில் வெற்றியைப் பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார் ஜெகன்மோகன் ரெட்டி. மக்களவைத் தேர்தலிலும் அம்மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளில் 22-ல் அவரது கட்சி வெற்றிக்கொடி கட்டியது. இத்தனை பிரம்மாண்ட வெற்றிக்குக் காரணம் அவரது தேர்தல் வாக்குறுதிகள் தான். குறிப்பாக விவசாய குடும்பங்களுக்கென ஒதுக்கப்பட்ட திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்த முக்கிய திட்டங்கள் குறித்து பார்க்கலாம். விவசாயிகளுக்கான திட்டங்கள்
ஒய்.எஸ்.ஆர் ரைது பரோசா என்னும் திட்டம் மூலம் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ரூபாய் 50,000 நிதியுதவி அளிக்கப்படும். ஆண்டுக்கு 12,500 ரூ வீதம் இந்த தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பகல் வேளையில் 9 மணிநேர இலவச மின்சாரம் வழங்கப்படும் மேலும் ஆழ்துளைக் கிணறுகள் தோண்ட நிதியுதவி அளிக்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் ஜெகன்மோகன் ரெட்டி.

பொறியியல் கல்வி இலவசம்


ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ஆர் பதவிக்காலத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய திட்டத்தின்மூலம் முழு கட்டணத்தையும் அரசே திருப்பி அளிப்பதுடன் சேர்த்து, உணவு மற்றும் உறைவிட செலவுகளுக்கு ஆண்டுக்கு 20,000 ரூபாய் இலவச நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கலந்தாய்வு வழியாக பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் 1 -1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான கட்டணம் அரசால் நேரடியாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதேபோல வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மனிதர்களுக்கு ஆந்திர அரசாங்கம் வெள்ளை நிற குடும்ப உறுப்பினர் அட்டை வழங்குகிறது. இப்படி வெள்ளை அட்டை வைத்திருப்போர் தங்களது குழந்தையை பள்ளிக்கு அனுப்பினால் ஆண்டுதோறும் ரூ.15,000 வழங்கப்படும்.

ஆரோக்கிய ஸ்ரீ

எளிய மக்களுக்கான தரமான மருத்துவத்தை உறுதி செய்வதற்காக ஆரோக்கிய ஸ்ரீ என்னும் திட்டத்தை அந்தக் கட்சி அறிவித்திருந்தது. இதன்மூலம் ஆரோக்கிய ஸ்ரீ அட்டை ஒருவருக்கும் வழங்கப்படும். ஆயிரம் ரூபாய்க்கு மேலாக மருத்துவ செலவு வருமாயின் அரசே அனைத்து செலவையும் ஏற்கும். இது தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பவர்களுக்கும் பொருந்தும்.
இவை போக 25 லட்சம் பேருக்கு வீடுகட்ட நிதியுதவி, ஆந்திர மாநிலம் முழுவதும் மதுவிற்கு தடை மற்றும் ஓய்வூuதியம் பெறுவதற்கான வயதுத் தகுதி 65-லிருந்து 60-ஆக குறைக்கப்படும் என அதிரடி திட்டங்கள் பலவற்றை அறிவித்திருந்தார்.

லஞ்சம் வாங்கினால் பதவி பறிப்பு


கடந்த ஜூன் எட்டாம் தேதி 25 பேர் அவரது அமைச்சரவையில்இணைந்தனர். இதில் 14 பேர் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, மலைவாழ் மற்றும் இதர சிறுபான்மையினர். இந்தியாவிலேயே முதன்முறையாக ஐந்து துணை முதலமைச்சர்களை ஜெகன்மோகன் தனது ஆட்சியில் சேர்த்துள்ளார். அமைச்சரவை உறுப்பினர்களின் முதல் கூட்டத்திலேயே பல ஸ்ட்ரிக்ட் ஆர்டர்களை ஜெகன்மோகன் ரெட்டி விதித்துள்ளார்.

அதில் முதலாவது எந்த அமைச்சரின் பேரிலும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தால் தனி விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் பதவி பறிக்கப்படுவதுடன் தண்டனையும் வழங்கப்படும் என அதிரடி காட்டியிருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி.
மேற்கூறிய அனைத்து திட்டங்களுக்குமான முதற்கட்ட வேலைகளை அந்த அரசு முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இத்தனை திட்டங்களையும் ஐந்து ஆண்டுகளுக்குள் ஜெகன்மோகன் ரெட்டியால் நடைமுறைக்கு கொண்டுவர முடியுமா? என்பது சந்தேகம் தான். ஒருவேளை அவருடைய அரசு இதை எல்லாம் கொண்டுவந்துவிட்டால் அடுத்த முறை மட்டுமல்ல அதற்கு அடுத்த முறையும் ஜெகன்மோகன் தான் ஆந்திராவின் முதலமைச்சர்.

-தொகுப்பு திலீபன்- 

No comments