விடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினர் சிங்கண்ணை சாவடைந்தார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினரான  சிங்கன் (சிங்கண்ணை) அல்லது கோமகன் என்று அழைக்கப்படும் முருகன் சிங்கராசா சாவைடந்துள்ளார்.

வடமராட்சி கரவெட்டி கிழக்கில் பிறந்த சிங்கன் இந்திய இராணுவம் தமிழீழ மண்ணில் ஆக்கிரமித்த நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைந்துக்கொண்டு பின்னர் முழுநேரப் போராளியாக தன்னை மாற்றிக்கொண்டார்.

இக்காலத்தில் இந்திய இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் இரகசிய வேலைகளையும் சில இடங்களில் வெளிப்படையாகவும் பணியாற்றினார்.

இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்திற்குப் பின்னர் தமிழ்ச் சமூகம் சார்ந்த சாதியம், பெண் அடிமைத்தனம் மற்றும் சண்டியர்களை அடக்கும் பணிகளில் மேஜர் செங்கதிருடன் இணைந்து பணியாற்றினார்.

பின்னர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மற்றும் பா.நடேசனின் கீழ் இயங்கினார். இக்காலத்தில் அரசியல் பணி, போர் களம் என தனது பங்களிப்பை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கினார்.

அரசியற்துறையின் கீழ் இயங்கிய தமிழீழ மாவீரர் பணிமனையில் பொன்.தியாகம் அப்பாவுடன் இணைந்து மாவீரர் துயிலுமில்லங்களைக் கட்டியெழுப்பும் புனிதப் பணியில் தன்வாழ்வை அர்ப்பணித்த சிங்கன் முள்ளிவாய்க்கால் போரின் இறுதிவரையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது பணியைத் தொடர்ந்து செய்திருந்தார்.

விசுவமடு தேராவில் துயிலுமில்லத்தினுள் அமைக்கப்பட்ட பணிமனையில் இருந்தவாறு மாவீரர்களுக்கான புனிதப் பணியைச் தொடர்ச்சியாகச் செய்துவந்தார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்திரால் தரைமட்டமாக்கப்பட்ட துயிலுமில்லங்களை யாழ் மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் இளம்பருதியுடன் இணைந்து மீளப் புனரமைப்பதிலும் தனது பங்களிப்பைச் செய்திருந்தார்.

தேசப்பற்றின் மிகுதியால் தனது  மூத்த மகள் ஒருவரை மாவீரராகவும், இன்னொரு தனது மக்களை  முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில்  இழந்து உடல் முழுவதும் காயங்களுடன், வாழ்ந்த சிங்கன்  யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டு சிறப்புத் தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டு பின்னர் விடுதலையானார்.

அவர் விடுதலையான நாள் முதல் அவர் சாதாரண இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமால் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்த சிங்கண்ணை தமிழீழ போராட்டம் குறித்தே இறுதிவரையும் புலம்பிக்கொண்டிருந்தார். இவ்வாறான சூழ்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (19-05-2019) அவர் சாவடைந்தார்.

இதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் தேச உணர்வாளர்களும் பொதுமக்களும் மாலை நடைபெற்ற  இறுதி வணக்க நிகழ்வில்  கலந்து மரியாதை செலுத்தினர்,No comments