அழியா நினைவுகளின் நீட்சியே தமிழின அழிப்பின் சாட்சி! பனங்காட்டான்

தமிழினத்தின் மீதான முப்பதாண்டுகால அரச பயங்கரவாத செயற்பாடுகளின்போது சிங்கள தேச அரசுகளின் சுவீகாரப் பிள்ளைகளாகவிருந்த முஸ்லிம்கள் இப்போது அவர்களின் வேண்டாத
பிள்ளைகளாகியுள்ளனர். வடக்கும் கிழக்கும் இணைந்த பெருநிலப்பரப்பில் தமிழரும் முஸ்லிம்களும் நல்ல அயலவர்களாக இயங்கக் கூடாதென்பதில் குறியாகவிருக்கும் சிங்கள ஆட்சி பீடம் ஆறு கடந்த பின் அவர்களை நீருக்குள் மூழ்கடிக்க முயல்கிறது.

அநாகரிக அரசியல், பண்பற்ற அரசியல், ஒழுக்கமற்ற அரசியல் என்றெல்லாம் கேள்வியுற்றுள்ளோம். அலங்கோல அரசியல் பற்றி அறிந்திருக்கிறோமா?

இலங்கையில் இப்போது நடைபெறுவது அதுதான். கேவலமான அலங்கோல அரசியல் அங்கு இப்போது அரசோச்சுகிறது.

அலங்கோல அரசியல் என்பதன் வரைவிலக்கணம் என்னவென்று தெரிய வேண்டுமானால் இலங்கையின் போக்கையும் நோக்கையும் உற்று நோக்கினால் போதும்.

ஒரேயொரு விளக்கத்தை மட்டும் இதற்குக் கொடுத்தால் போதும்.

2015ஆம் ஆண்டுத் தேர்தல்களின்போது ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே அணியில் ஒரே கொள்கையில் கூட்டாக நின்று மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் இணைந்தே கூட்டாக தங்களுக்கான அமைச்சரவையை உருவாக்கினார்கள்.

சொல்லப்போனால் கணவன் - மனைவி போன்று ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே நல்லாட்சி இடம்பெறும். அப்படித்தான் இயங்குவார்கள் என்ற நம்பிக்கையில் நாட்டின் சகல சிறுபான்மை இனங்களும் இவர்களுக்குத் தங்கள் வாக்குகளை வழங்கி ஆட்சிபீடம் ஏற்றினர்.

ஆனால், அடுத்த தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னரே ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க விரும்பாதவர்களாக ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் அரசியல் குடும்பம் நடத்தினால், அரசாங்கம் என்ற இயந்திரம் என்னாகும்?

கடந்த அக்டோபரில் ரணிலை பிரதமர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி, நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறுத்தி, மகிந்தவை பிரதமராக நியமித்து அரசமைப்புக்கு முரணாக மைத்திரி செயற்பட்டதோடு இவர்களுக்குள் பிய்ச்சல் பிடுங்கல் ஆரம்பமானது.

ஆனால் இறுதியில் எல்லாமே பொரிமாத்தோண்டி கதையானது. ரணில் மீண்டும் பிரதமராக சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோனது. இந்தச் சதுரங்க விளையாட்டில் மகிந்த எதிர்க்கட்சித் தலைவரானார்.

ஆக, இந்த அரசியல் சூறாவளியில் பலியான ஒரேயொருவர் தமிழரான கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். மூன்று சிங்களத் தலைவர்களும் தங்களுக்கு ஒவ்வொரு கதிரையை கைப்பற்றிக் கொண்டனர்.

மகிந்த ஜனாதிபதியாகவிருந்தவேளையில் (2005 – 2015) தனது தம்பி கோதபாயவை பாதுகாப்புச் செயலாளராக்கி முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களையும், வணிக நிலையங்களையும் அடித்துடைத்து எரித்து அட்டூழியங்கள் புரிந்தார்.

தமிழ் மக்கள் மீதான அரச பயங்கரவாதம் மூன்று தசாப்தங்களாக தலைவிரித்தாடிய காலத்தில், சிங்கள ஆட்சி பீடத்தின் சுவீகாரப் பிள்ளைகளாக முஸ்லிம்கள் செயற்பட்டது புதுக்கதையன்று.

கிழக்கிலங்கையின் கொக்கட்டிச்சோலை, சத்துருக்கொண்டான், புதுக்குடியிருப்பு, கிரான் ஆகிய தமிழ்க் கிராமங்களின் படுகொலைக்கான சாட்சியங்கள் உயிருடன் உள்ளனர்.

இவ்விடத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடாக வெளிவந்த ஷவிடுதலைப்புலிகள்| பத்திரிகையின் 1990 ஐப்பசி – கார்த்திகை மாத இதழின் முதற்பக்க முக்கிய செய்தியின் தலைப்பாக ஷமுஸ்லிம்களால் ஒரு நெருக்கடி| என்பதை கவனிக்க வேண்டும். இந்தச் செய்தியின் முதற்பந்தி பின்வருமாறு அமைந்திருந்தது:

“தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று ஒரு புதிய நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதுவரை நாளும் சிங்களப் பேரினவாதத்தால் தாக்கப்பட்டு வந்த தமிழர்கள், இன்று முஸ்லிம் காடையர்களின் கொலைவெறிக்குள்ளும் அகப்பட்டு சொல்லொணாத் துயர்களை அடைந்து வருகின்றனர். சிங்கள ஆக்கிரமிப்புக்கெதிராக தமிழர்களுடன் சேர்ந்து போராட வேண்டிய தமிழீழ முஸ்லிம்கள் எந்தவிதமான தீர்க்கதரிசனப் பார்வையுமில்லாது சிங்களப் பேரினவாதத்துக்கு உட்பட்டு தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்”.

இந்தச் செய்தியின் இறுதிப் பந்தி பின்வருமாறு இடம்பெற்றது:
“சிங்கள இனவாதப் பூதத்தை திருப்திப்படுத்தி அற்ப சலுகைகளைப் பெறுவதற்காக அயலவர்களான தமிழர்களைக் கொன்றொழித்த முஸ்லிம்கள், நாளை அதே சிங்கள இனவாதப் பூதத்தால் விழுங்கப்படப் போகிறார்கள்”. எவ்வளவு தீர்க்கதரிசனமான பார்வை.

இனத்தின் விடுதலைக்காகவும், மண்ணின் மீட்புக்காகவும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடியவர்கள் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதனை எழுதினார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த மாதம் 21ஆம் திகதிய குண்டுத்தாக்குதல்களை மையப்படுத்தி முஸ்லிம்கள்மீது சிங்கள தேசம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டு தமிழ் மக்கள் அதிர்ச்சியடையவில்லை.

ஒரு சிறுபான்மை இனத்தை நசுக்க இன்னொரு சிறுபான்மை இனத்தைப் பயன்படுத்துவதும், அந்த வேலை முடிந்தபின்னர் பின்னையதை நசுக்க முன்னையதின் ஆதரவைப் பெற முனைவதும் (முன்னாள் போராளிகளை இராணுவம் அழைத்து கூட்டம் நடத்துகிறது) இனவாதப்பூதம் அதேயிடத்தில் அவ்வாறே இயங்குகிறது என்பதை நிரூபிக்கிறது.

இந்த விடயங்களை இங்கு குறிப்பிடுவதால் முஸ்லிம்கள் மீது சிங்கள தேசம் மேற்கொண்டிருக்கும் எதேச்சாதிகாரப் போக்கை தமிழர்கள் வரவேற்கிறார்கள் என்று கருதக்கூடாது. அல்லது தமிழர் தரப்பு அவர்களைக் காட்டிக்கொடுக்க முன்வருமென்றும் தப்புக் கணக்கு போடக்கூடாது.

முப்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணில் சந்தித்த அனர்த்தங்களை முஸ்லிம்கள் இப்போது சந்திக்க நேர்ந்துள்ளது. சிங்களவர்கள் ஆள்பவர்களாகவும், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆளப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை இது நன்றாகவே எடுத்துக் காட்டுகிறது.

விடுதலைப் புலிகள் பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட ஷஅயலவர்களான தமிழர்கள்| என்ற சொற்றொடர் தமிழர்களும் முஸ்லிம்களும் அருகருகே இணைந்து வாழ வேண்டியவர்களென்பதை எடுத்துக்காட்டுவது.

வடக்கும் கிழக்கும் இணைந்த தாயகமாக இருக்குமானால் இங்கு வாழும் தமிழரும் முஸ்லிம்களும் இப்பெரு நிலப்பரப்பின் பெரும்பான்மை இனத்தவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவர்கள். இதனை இல்லாமற் செய்யவே இதுவரை எல்லாம் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையை பௌத்த நாடு என்று மகிந்த, ரணில் இவர்களோடு இணைந்த அனைவரும் மீண்டும் மீண்டும் நினைவூட்டி வருகின்றனர். அமைச்சரான மங்கள சமரவீர இதனை மறுப்பது ஒருவகை அரசியல். தாம் பௌத்தர் அல்லர் என்றும், பௌத்த கொள்கைகளை பின்பற்றுபவர் என்றும் சில நாட்களின் பின்னர் இவர் சொல்வது மற்றொருவகை அரசியல்.

சிங்கள அரசியல் மேதாவிகளின் வாதப்பிரதிவாதங்களுக்கு சூடாகப் பதிலளித்துள்ளார் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

இலங்கை சிங்கள் பௌத்த நாடெனில் வடக்கும் கிழக்கும் தனித்தமிழர் தாயகமென்பது இவரது கூற்று.

இலங்கையின் சனத்தொகையில் எழுபத்தைந்து சதவீதம் சிங்கள் பௌத்தர்கள் என்ற முறையில் இது சிங்கள பௌத்த நாடென்றால், வடக்கு கிழக்கை சிங்கள பௌத்த நாடு என்ற கருத்தமைப்புக்கு வெளியே எடுத்து, அதற்கு தனித்துவமான ஓர் அடையாளத்தை வழங்குவது அவசியம் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான புதிய நெருக்கடிகளை உருவாக்கும் அலங்கோல அரசியற் சூழலில் தமிழர் எதிர்நோக்கும் அரசியல் அபிலாi~கள் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்தில் நிறைவேறுவதற்கான சாத்தியமில்லை.

இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் இது சாத்தியமில்லையென்று தமிழரசு கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்திருப்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

தற்போதைய அரசியல் பொதுவெளியில் புதிய அரசியலமைப்பு, வழிகாட்டல் குழு அறிக்கை, தெரிவுக்குழுக்களின் பரிந்துரை என்பவையெல்லாம் காற்றோடு கலந்த கதைகளாகிவிட்டன.

முள்ளிவாய்க்காலின் பத்தாவதாண்டு நினைவு நிகழ்வுகள் மௌனப் பிரகடனம் ஒன்றை தமிழர் மனதில் பதித்துள்ளது.

வலியுடன் வாழும் மக்களின் அழியா நினைவுகளின் நீட்சியே, தமிழின அழிப்பின் சாட்சியாக நின்று, இவ்வினத்தின் எதிர்கால மீட்சிக்கு உதவும்.



No comments