இந்திய புலனாய்வு இறங்கியது! இப்போது இறைமை என்னானது? பனங்காட்டான்...

தமிழினப் படுகொலையை விசாரணை செய்ய வெளிநாட்டு நீதித்துறையை உள்ளடக்கிய கலப்பு நீதிப்பொறிமுறையை அனுமதித்தால் இலங்கையின் இறைமைக்கு முரணாகி விடுமென கூறிவரும் சிங்கள பௌத்த அரசு இப்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்க இந்திய தேசிய புலனாய்வுத்துறையை இலங்கைக்குள் கால் பதிக்க எவ்வாறு அனுமதித்தது? 
இப்போது இலங்கையின் இறைமை எங்கே போயிற்று?

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதம் அல்லது தீவிரவாதம் (பயங்கரவாதத்தின் மென்மைப் பெயர்கள்) தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் அந்நாட்டு அரசாங்கத்தின் பலவீனப் பக்கத்தைபுடம்போட்டுக் காட்டுகிறது.

ஜனாதிபதி பதவி வகிப்பதற்கு மைத்திரிபால சிறிசேன தகுதியானவரா என்ற கேள்வி மட்டுமன்றி, ரணிலின் நிர்வாக தகுதியின்மையையும் உரசிப் பார்க்க வைக்கிறது.உயிர்த்த ஞாயிறன்று பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுமென்பது ஜனாதிபதிக்குத் தெரிந்திருந்தும்,  அவர் உரிய நடவடிக்கை எடுக்கத்தவறினார் என்ற விடயம் இப்போது பரவலாகத் தெரிய வந்துவிட்டது. அதனை மூடி மறைப்பதற்காக பாதுகாப்புச் செயலாளரையும் பொலிஸ்மா அதிபரையும் பதவி விலகுமாறு அவர் கேட்டிருந்தார்.பாதுகாப்பு சம்பந்தமான எந்த அனுபவமுமற்ற அதன் செயலாளர் விட்டால் போதுமென்பதுபோல உடனடியாகவே வீட்டுக்கு ஓடிவிட்டார்.ஆனால் பொலிஸ்மா அதிபரோ தவறேதும் செய்யாத தாம் ஏன் பதவி விலக வேண்டுமென்று நியாயம் கேட்க, அவரைக் கட்டாய லீவில்அனுப்பினார் ஜனாதிபதி.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர் இதுவரை ஐவர் பாதுகாப்புச் செயலாளராகநியமனமாகினரென்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது.இரண்டு அதிகாரிகளையும் வீட்டுக்கு அனுப்பியதோடு நிறுத்தாது,  அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்குமாறு ஜனாதிபதி பணித்தார்.இவ்வாறு செய்வதன் மூலம் தம்மீதான குற்றச்சாட்டை நீக்கி, முழுப்பழியையும் அவர்கள் மீது போடுவதே இவரது திட்டமாக இருந்தது.ஆனாலும் உள்ளிருந்து கிள்ளும் ரணில் விக்கிரமசிங்கவின் அணி சும்மா இருக்கவில்லை. நாடாளுமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி இது தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்தது.ஒருபுறத்தில் இக்குழு விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்க மறுபுறத்தில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இராணுவ - பொலிஸ் சோதனைகள் தீவிரமடைந்தன. சில பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டன. பல இடங்களில் ஆயுதங்கள் மீட்கப்பட்டன பலர் சந்தேகத்தில்கைதாகினர்.

மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை
நாடாளுமன்றத்தில் ஒரு தரப்பு தாக்கல் செய்ய, இன்னொரு தரப்பு ரணிலின் அரசாங்கம் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை
முன்மொழிந்தது.கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தமது பணி இடைநிறுத்தத்துக்கு எதிராக இடைக்காலத் தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதேசமயம் இவர் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னால் யூன் மாதம் 4ஆம் திகதி முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.

இது இப்படியிருக்க அமைச்சர் மங்கள சமரவீரவின் நிதி அமைச்சினது ஊடகப்பணிப்பாளரான மொகமட் அலி ஹசன் என்பவர் அவரதுவீட்டில் கைக்குண்டுகள் மீட்கப்பட்ட குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார். ஏற்கனவே நாடாளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளர் ஒருவர்கைதாகி உள்ளே தள்ளப்பட்டுள்ளார்.
குருநாகல் மருத்துவமனையின் பிரசவ வைத்திய நிபுணரான முஸ்லிம் சமூகத்தவர் ஒருவர் எண்ணாயிரம் பெண்களுக்கு சட்டவிரோத கருத்தடை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு வரும் முஸ்லிம்களிடமிருந்து கோடிக்கணக்கான பணம் மீட்கப்பட்டு வருவதாக பொலிசார் கூறிவருகின்றனர்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட காலத்தில் பல தமிழ்ப் பிரமுகர்களை சிங்கள ஆட்சி பீடம் எவ்வாறு குற்றஞ்சாட்டி கைது
செய்ததோ அதே பாணியில் இப்போது முஸ்லிம் சமூகம் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிக்குப் பின்னர் - அதாவது கடந்த மூன்று மாதங்களாக தேசிய பாதுகாப்புச் சபை கூட்டப்படவில்லையென்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இச்சபையின் தலைவர் ஜனாதிபதி என்ற வகையில் இதற்கான முழுப்பொறுப்பையும் அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும். இச்சபையின் கூட்டத்தை நடத்தினால் பிரதமர் ரணிலையும் அழைக்க வேண்டி நேரிடும் என்பதாலேயே கூட்டங்களை இவர் நடத்தாதிருந்தார் என்பதே உண்மை. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஆரம்பமான அரசியல் புரட்சியின் தாக்கம் இதுகாலம்வரை நீண்டு செல்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியவர்களுக்கு இது வாய்ப்பாக அமைந்திருக்கலாமென கருதப்படுகிறது.

அமெரிக்கா - சீனா - இந்தியா என்ற முக்கோண அரசியல் சதுரங்கத்துக்குள் இலங்கை வசமாக சிக்கியுள்ளதென்பதை மறுக்க முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி முற்கூட்டியே தெரிந்திருந்தும் அது தொடர்பாக தகவல் பரிமாற்றங்கள்
இடம்பெற்றிருந்தும் பாதுகாப்பு அமைச்சர் (ஜனாதிபதி) தாம் எதனையும் அறிந்திருக்கவில்லையென்று கூறுவதை ஏற்க முடியாதென்று நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் கூறியுள்ளனர். தாக்குதல் முன்னெச்சரிக்கை பற்றி எழுத்து மூலம் பொலிஸ்மா அதிபருக்குத் தெரிவிக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழுத்திக் கூறியுள்ளனர்.

உண்மையிலேயே பாதுகாப்பு அமைச்சர் (ஜனாதிபதி) இதுபற்றி அறிந்திருக்கவில்லையென்றால் பாதுகாப்புப் பொறிமுறையில்
பெரும் பிரச்சனைகள் இருந்துள்ளன என்றும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.மைத்திரிபால சிறிசேனவின் அறிவின்மை அனுபவமின்மை ஆற்றலின்மை நாட்டின் பாதுகாப்பில் அக்கறையின்மை என்பவைகளே அவரது தவறுக்குக் காரணமாக இருக்கலாமென்று கூறினால் அது பிழையாகாது.
புலனாய்வுத் தகவல்கள் வெளிவந்திருந்த வேளையில் உரிய நடவடிக்கைகள் எடுத்திருந்தால் தாக்குதல் சம்பவங்களைத் தடுத்திருக்கலாமென புதிய பாதுகாப்புச் செயலாளரான முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கொட்டகொடவின் கூற்றும் மைத்திரிபாலவை நோக்கி விரல் நீட்டுவதாகும்.
ஆக மொத்தத்தில் இது தொடர்பான சகல குற்றச்சாட்டுகளும் அனைத்து நிறைவேற்று அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதியின் மீதே
சுமத்தப்படுகிறது. ஆனால் அவர் தொடர்ந்து தம்மைச் சுற்றவாளியாகக் காட்ட முனைகிறார். தமக்கு இதுபற்றி முற்கூட்டி யாருதே
தெரிவிக்கவில்லையென்று மீண்டும் மீண்டும் பொய்யைக் கூறுவதனூடாக அதனை உண்மையாக்க முயலகிறார் போலும்.
இவைகளுக்கப்பால் உலக நாடுகள் பலவற்றிடம் இது தொடர்பான விசாரணைக்கான ஒத்துழைப்பை  அவர் கோரியுள்ளார்.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்று செய்யப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.இதனை நம்பலாமா முடியாதா என்ற சர்ச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இந்திய தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்குள் கால் பதித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியாவுடன் கொண்டிருந்த தொடர்பு பற்றிய விபரங்களைக் கண்டறிவதே இக்குழுவின் நோக்கமாம். கேரளா வழியாக தாக்குதலாளிகளுக்கு தொடர்பு இருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டபோதே இதனை ஒரு சாட்டாக
வைத்து இந்தியா தனது காலை இலங்கைக்குள் நீட்டுமென்பது எதிர்பார்க்கப்பட்டதே.

1987ஆம் ஆண்டில் வடமராட்சியை மையப்படுத்தி இந்திய விமானங்கள் தமிழருக்கு அரிசி பாண் பூசணிக்காய் (இதனை தமிழருக்கு
வாய்க்கரிசி என்று அப்போது ஊடகங்கள் எழுதின) போட்டது போன்றதே இதுவும் ஐ.எஸ். பயங்கரவாதிகளது ஆதரவாளர்களுடன் தற்கொலைத் தாக்குதல்தாரிகளுக்கு ஏதாவது தொடர்பிருந்ததா என்பதையே இந்திய குழு கண்டறியப் போவதாக அந்நாட்டு ஊடகங்கள் எழுதியுள்ளன. எதுவானாலும் இலங்கை அரசின் அனுமதியின்றி இவர்கள் அங்கு நுழைந்திருக்க முடியாது.

இவ்விடத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.
தமிழினப் படுகொலையை விசாரிக்க கலப்பு நீதி விசாரணைக் குழுவை ஏற்படுத்தும் தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டபோது இலங்கை அரசு இதற்கு அனுசரணை அளித்தது.
ஆனால் இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. வெளிநாட்டு நீதித்துறையினரை உள்வாங்கி கலப்பு நீதிப் பொறிமுறையை
அனுமதிப்பது இலங்கையின் இறைமைக்கு விரோதமானது என்பதே இலங்கை அரசு தொடர்ந்து கூறி வரும் காரணம்.
இது உண்மையானால் இந்தியப் புலனாய்வுத்துறை இப்போது விசாரணைக்கென இலங்கைக்குள் சென்றுள்ளதால் இலங்கையின் இறைமைக்கு இதுவிரோதமாகவில்லையா?
இப்போது இலங்கையின் இறைமை எங்கே போயிற்று?

No comments