வேர்களின் வலிகளைத் தாங்கிக்கிடக்கும் கிளைகளும் விழுதுகளுமாக இணைவோம் வாரீர் !!

மனித உள்ளங்களின் எண்ண வெளிப்பாடுகளைப் பதிவதற்காகக் காலப்போக்கிலே எழுந்தவைதான் எழுத்து எனப்படும் வரிவடிவம். ஆனால், அவ்வெழுத்துகளின் கோர்வையே சொற்களாகி மானிடத்தை ஆளுகை செய்கின்றன. ஈழத்தமிழினத்தின் எண்ணங்களுக்குள்ளும் வரலாறாக, கனவாக, வலிகளாக பதங்கள் பலவும் பதிந்து கிடக்கின்றன. அப்படியானவற்றில் சிலதான் கறுப்பு யூலை, ஆனந்தபுரம், மே 18, முள்ளிவாய்க்கால் என்பன. இவற்றுள்ளே எங்கள் இனத்தின் இருப்பையே புரட்டிப்போடவைத்த, இமயவலி சுமக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட மே மாதம், தனது 10 ஆவது ஆண்டையும் நிறைவுசெய்து நீண்டு எம் ஒவ்வொருவரினதும் இதயங்களிலும் கனத்துக்கிடக்கிறது. ஏதோ இயற்கையான அழிவானால் அழுது புலம்பிவிட்டு ஆண்டாண்டுக்கு நினைவுகூர்வதன் மூலம் நிம்மதிபெறலாம். ஆனால், இதுவோ துல்லியமாகத் திட்டமிட்டு எடுக்கப்பட்ட நரபலி; புத்தமகானையும், காந்தியையும், மனித உரிமைகளையும்
வெற்றுக்கூச்சலிடும் எல்லோருமாகச் சேர்ந்து தங்களுடைய குறுகிய ஆதிக்க நலன்களுக்காக அடியோடு எம்மைப் பலியெடுத்த ஆழவேதனை பிரசவித்த எம் தாயகமடி. 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒன்றரை இலட்சம் மக்களைக் கொன்றொழித்தவன், உயிரற்ற உடல்களையும் நிர்வாணமாக்கி பௌத்தவெறியின் பரிபூரண நிலைபெற்றவன், எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு நடைப்பிணங்களாக எஞ்சியவர்களையாவது வாழ விடுகின்றானா ! இல்லையே!!

சிங்களப்பேரினவாதம் சுதந்திரமாகக் கோலோச்சத்தொடங்கிய 1948 இலிருந்து ஆட்சியாளர்கள், ஆளுங்கட்சிகள், எதிர்க்கட்சிகள், இவர்களைத் தீர்மானிக்கும் மக்கள், உலகத்தரப்புகள் என எல்லாமே காலத்துக்காலம் மாறிவந்தபோதி,ம் தமிழினத்தைச் சிதைக்கும் போக்கிலே எல்லாமே ஒற்றுமையாக ஒரே பேரினவாதக்குடையின்கீழ் தம் நகர்வுகளை எந்தவித இடைவெளியுமின்றி தொடர்ச்சியாக நிகழ்த்தி வந்துள்ளன. அந்த வகையிலேதான் அண்மைய ஈஸ்ரர் உதித்த ஞாயிறு அன்றுதொட்டு அரங்கேற்றப்பட்டுள்ள அசாதாரண நிலையும். தமிழரின் விடுதலைப்போராட்ட ஆற்றலை நசுக்குவதிலே தான் அடைந்த மமதையோடு அடங்கிவிடமுடியாத சிங்களப்பேரினவாதம், இப்போது தன்னுடைய அடுத்தகட்ட நகர்வுகளுக்கான தளத்தினைத் தயார்செய்துகொண்டுள்ளது. சீனசார்பு மகிந்த தரப்பு தன்னுடைய சிங்களப்பேரினவாதத்தை வளர்ப்பதற்கான மையமாகப் பொதுபலசேனாவை ஒருபுறம் வளர்த்துள்ளது. மறுபுறம் தனக்குத்  தேவைப்படக்கூடிய மேற்குலக எதிர்ப்பினைச் சிங்களபௌத்த முகம்கொண்டு முன்னெடுப்பதைவிட, அமெரிக்கா சார்ந்த மேற்கிற்கு ஒவ்வாத இஸ்லாமியம்கொண்டு மேற்கொள்வது புத்திசாதுரியம் எனச் சிங்களம் செயற்படுகிறது. அப்பாவிமக்கள்மீதான தாக்குதல்களில் ஈடுபட்ட தௌகீத் ஜமாத் அமைப்பின் குண்டுதாரிகள் மகிந்த தரப்புடன் கொண்டுள்ள தொடர்பு குறித்த தற்போதைய சிங்கள அரசின் செய்திகளை இந்தப் பின்னணியிலே நாம் புரிந்துகொள்ளலாம்.

அப்படியானால் 2009இல் தமிழினப்படுகொலையை மேற்கொண்ட மகிந்த அரசுதானா இதற்கும் முழுக்காரணம் என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். ஏனெனில் தாக்குதல் குறித்த எச்சரிக்கைகள் கிடைக்கப்பெற்றும் வேண்டுமென்றே உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லையோ என்ற சந்தேகம் தற்பொழுது வலுப்பெற்று வருகிறது. இஸ்லாமிய அமைப்பொன்று முழுவதுமாகத் திட்டமிட்டு இத்தொடர்தாக்குதல்களை ஏன் குறிப்பாகத் தமிழ்க்கத்தோலிக்க மக்கள்மீது மேற்கொள்ளவேண்டும் ? ஏன் சிங்களக்கத்தோலிக்கர்கள்மீது நிகழ்த்தவில்லை ? (நீர்கொழும்பில் புனித செபஸ்ரியான் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் முன்னாள் தமிழர்களே) அதிலும் கடந்த வருடம் இஸ்லாமியச்சமூகம் மீது சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர்வன்முறைகளை எல்லாம் மறந்துவிட்டு, உதித்த ஞாயிறு தமிழ்ப்பூசை எங்கெல்லாம் நிகழ்கிறதோ எனத் தேடிப்பார்த்து குண்டுகள் வெடித்துள்ளன. இத்தாக்குதல்களுக்குச் சொட்டுநீலம்போட்டு சர்வதேசங்களிலும் தலைப்புச்செய்தி ஆகும் வண்ணம், சமகாலத்தில் நட்சத்திரவிடுதிகளிலும் குண்டுகள் அப்பாவி வெளிநாட்டவர்களைப் பலிகொண்டுள்ளன. இதன் உண்மையான சூத்திரதாரிகளை நாம் தேடுவதற்கு முன், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையையே சரியாகக் கூறமுடியாத நிலையில், அது நியூசிலாந்து கிறிஸ்ற்சேர்ச் தாக்குதலுக்கான பழிவாங்கலாக தௌகீத் ஜமாத் அமைப்பு மேற்கொண்டதாக சிறீலங்கா அரசு அறிவித்திருந்ததை நோக்கலாம். மேற்குலகத்தின் அனுதாபத்தை அதிகம் எட்டக்கூடியவகையிலே  நிகழ்ந்தேறிய இக்குண்டுவெடிப்புகளின் பின்னரான அரசின் கெடுபிடி நடவடிக்கைகள் இப்படியான நிலையை அது அதிகம் விரும்பியிருந்ததோ என எண்ணத்தோன்றுகிறது. தமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சியைத் தமிழ்மக்கள் மற்றும் சர்வதேசத்திடையே இதன்மூலம் உண்டுபண்ணிவிட்டு, படையினரின் கெடுபிடி நடவடிக்கைகளைத் தவிர்க்கமுடியாதவையாகக் காட்டிக்கொண்டு, இனச்சுத்திகரிப்புக்கான மௌன யுத்தம் ஒன்றினை சர்வதேசத்தின் கண்களுக்கு முன்னேயே கைங்கரியமாக நிகழ்த்துவதற்கான களமே தற்போது அரங்கேறியுள்ளது. கிடைத்த எச்சரிக்கையை அடுத்து உரிய பாதுகாப்புநடவடிக்கைகளை எடுத்திருந்தால் மட்டுப்படுத்தப்பட்ட கால எல்லைக்குள் உயிரிழப்புகளையும் தவிர்த்து இயல்புநிலையை நாட்டில் கொண்டுவந்திருக்க முடியும். வெறுமனே ஊகங்களினூடான குற்றச்சாட்டை இக்கட்டுரை தவிர்க்கிறது. அதேவேளை தற்போது முஸ்லீம் மக்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழினம்மீதான நாடளாவிய, பாதுகாப்பு என்ற தோரணையிலான இனச்சுத்திகரிப்புக்கெடுபிடிகள் முன்னெடுக்கப்படும் ஈடுபாட்டினை நோக்கும்போது, ஈஸ்ரர் தாக்குதல்மூலம் இலாபம் அடைந்த தரப்பு எது என்ற கேள்வியோடு இதனை ஆராய்வதே பொருத்தமாக இருக்கும். சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரி தாக்குதலைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பிரதம மந்திரி ரணிலும், எனக்கு ஒருவரும் தெரியப்படுத்தவில்லை என்று பாதுகாப்புத்துறையை ஜனாதிபதியும் ஆளாளுக்குக் குற்றம் சாட்டுகின்றனர். அமைச்சரவைப்பேச்சாளர் மகிந்த குடும்பத்தைச் சாட்சியோடு குற்றம் சாட்டுகிறார். ஆக அவர்களைவிட்டுவிட்டு பல்கலைக்கழகத்தினுள் புகுந்து தமிழ்மாணவர்களைக் கைதுசெய்கின்றனர்.
ஏனெனில் யுத்தத்தினை 2009இல் இனவழிப்புடன் முடிவுக்குக்கொண்டுவந்த சிறீலங்கா அரசானது, தமிழ்மக்கள்சார்பான ஐ.நா. எதிர்பார்க்கும் மிகக்குறைந்தபட்ச விடயங்களைக்கூட நிறைவேற்றுவதற்கு இதுவரை காலமும் முன்வந்திருக்கவில்லை. மாறாக 2008-2009 கால யுத்த உச்சக்கட்டத்தில் பாதுகாப்புக்காக 1,5 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் முப்படைகளுக்காகச் செலவிட்ட சிறீலங்கா, இந்த 2019 இற்கு 2,2 பில்லியன் டொலர்களை வேறு எதனை எண்ணி அண்மையில் ஒதுக்கியுள்ளது ? அடுத்தகட்ட இனவழிப்பிற்கு சிறீலங்கா தயாராகிவிட்டதா ? யேர்மனியின் பயேர்ண் (பவேரியா) மாநிலத்தின் பரப்பளவைக்கொண்ட இலங்கைத்தீவிலே சிறீலங்காவின் முப்படைகளின் எண்ணிக்கை காவற்றுறை மற்றும் துணைப்படைகள் நீங்கலாகவே 281 000 ஆக உள்ளது. ஆனால், இலங்கையைவிட பரப்பளவிலே 6 மடங்கு பெரியதான நாம் வாழும் யேர்மனி வெறுமனே 170 000 பேரைக்கொண்ட முப்படைகளுடன் அனைவரையும் மதிக்கும் அமைதித்தேசமாகத் திகழ்கின்றது. 

இப்போது 10 ஆண்டுகளாக எந்தவித நியாயத்தையும் தாயக உறவுகளுக்காக இதுவரை பெற்றுக்கொடுக்காமல் இதயம் கனக்க புலம்பெயர்நாடுகளில் வாழும் எம்மவர் ஒவ்வொருவரும் எமது தலையாய கடமை குறித்து சில தெளிவுகளுக்கு வரவேண்டியுள்ளது. இங்கு பாதுகாப்பான நல்வாழ்க்கை கிடைத்துவிட்டதற்காக எமக்குள்ள கடமைகளிலிருந்து நாம் ஒதுங்கிவிடலாமா ? அடுத்தகட்ட இனச்சுத்திகரிப்பை முடுக்கிவிட்டுள்ள ரணில்-மகிந்த-மைத்திரி முத்தரப்பின் நயவஞ்சகத்தை நாமும் புரிந்து, நமக்குள்ள ஜனநாயக வாய்ப்புகளைப் பயன்படுத்தி இங்குள்ள யேர்மனிய மக்கள் அனைவருக்கும் தெரியவைத்து, ஈழத்தமிழினத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நியாயம் கிடைப்பதற்கான ஆதரவுப்புலத்தையும் பலத்தையும் நாம் பெருக்கவேண்டும்.  வெற்றிக்கான சாத்தியப்பாட்டைப் பொறுத்து இலட்சியங்கள் வரித்துக்கொள்ளப்படுவதில்லை. 
 உலகநாடுகள் அங்கீகரிப்பதற்கு முன்பாக நாம் எல்லாம் உள்ளங்களில் நிறைத்து உரக்க உச்சரிப்போம் எமது வேர் தமிழீழம் என்று ! ஏனெனில் ஆக்கமும் அழிவும் ஆரம்பிப்பது உள்ளங்களிலேயே ! எமது அடையாளத்தைப் பேணிக்கொள்வதன் மூலம் மட்டுமே எமது இருப்பு தக்கவைத்துக் கொள்ளப்படும். எந்த இலட்சியத்திற்காக 40 000 இற்கு மேற்பட்ட மாவீரர்களும் 3 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ்மக்களும் உயிர்விலை கொடுத்தார்களோ, அந்த ஒட்டுமொத்த தியாகமும் உச்சரித்ததல்லவா "தமிழீழம்" ! ஆகவே, அன்பான உறவுகளே ! முன்பைவிட இனிமேல் நம்மிடையேயும், நம்மை அறிமுகப்படுத்தும்போதும் சிறீலங்கா என்பதைத் சிங்களதேசத்துக்கும், எமது தாயகத்துக்குத்   தமிழீழத்தையும், முழுத்தீவுக்கும் இலங்கைத்தீவு என்பதையும் வேறுபாடு உணர்த்தி அடையாளப்படுத்துவதில் தெளிவான உறுதியோடு இருப்போம் ! மே 18 இல்  அணிதிரண்டு தாயக உறவுகளுக்குக் கிடைக்கவேண்டிய நீதிக்கான குரலை உரத்து ஒலிப்போம். எம் மக்களின் ஒடுக்கப்பட்ட உரிமைகளை உலகநாடுகளின் மத்தியில் எடுத்துரைப்போம். வேர்களின் வலிகளைத் தாங்கிக்கிடக்கும் கிளைகளும் விழுதுகளுமாக இணைவோம் வாரீர் !!

-ஜெர்மனியிலிருந்து கோபன்-

No comments