சர்ச்சைக்குரிய வைத்தியர் தொடர்பில் புதிய முறைப்பாடு?


சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்துச் சேர்த்தமைத் தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள, குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் வைத்தியர் செய்கு ஷியாப்தீன் மொஹமட் ஷாபியை விசாரணையின் பின்னர் விடுதலை செய்யுமாறு, முஸ்லிம் மத அலுவல்கள், தபால் அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நேற்று  (25) ஜனாதிபதியின் செயலகத்தில் வைத்து இந்தக்கோரிக்கையை விடுத்தாரென, அமைச்சரின் குரல் பதிவுடன் சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் தான் அவ்வாறு விடுதலை செய்யுமாறு எவ்விதக் கோரிக்கையும் விடுவிக்கவில்லையென மறுத்ததுடன், விசாரணையை துரிதப்படுத்துமாறே ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாகவும் குறித்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின், வைத்தியர் செய்கு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக, பெண்கள் இருவர் முறைபாடு செய்துள்ளனர்.

வைத்தியசாலையின் நிறைவேற்றதிகாரியிடம் இன்றைய தினம் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

வாரியபொல, குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 32, 29 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு முறைபாடு செய்துள்ளனர்.

திருமணமாகி குறுகிய கால இடைவெளியில் தாம் கருவுற்று முதலாவது குழந்தையை குருநாகல் போதனா வைத்தியசாலையில்  சிசேரியன் மூலம் பிரசவித்த பின்னர் தமக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவில்லை என்றும் குறித்தப் பெண்கள் தமது முறைபாட்டின் மூலம் தெரிவித்துள்ளனர்.

இவர்களது முறைபாட்டை பதிவு செய்த வைத்தியசாலை நிர்வாகம்,  இவர்களுக்கு குடும்ப கட்டுபாடு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இப்பெண்களின் விருப்பத்துடன் நாளைய தினம் சோதனை செய்யவுள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார்.

No comments