இராணுவம் மீதான அவநம்பிக்கை அதிகரித்துள்ளது - பல்கலை மாணவர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவென வருகைதந்த இராணுவம் மாணவர்களையும், சிற்றூண்டிச்சாலை நடத்துனரையும் கைது செய்திருப்பது மாணவர்களிடையே இராணுவத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் இழக்க செய்துள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதன் ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலிகளுடைய குறித்த படங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த இடங்களில் வைக்கப்பட்டவையாகும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் இலங்கையிலுள்ள அனைத்து இன மாணவர்களும் இன பேதங்களை கடந்து நட்புறவுடன் பழகக்கூடிய நிலை காணப்பட்டது.

ஆனாலும் எப்போதோ வைக்கப்பட்ட படங்களைக் காரணம் காட்டி குறித்த மாணவர்களை கைது செய்திருப்பது மாணவர்களிடையே ஒற்றுமையைச் சீர்குலைக்குமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்யப்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

No comments