மோடிக்கு சம்பந்தன் எழுதிய கடிதம்


“இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு நிறைவான நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான ஒரு நிரந்தரத் தீர்வை எட்டும் முகமாகவும் மேலும் தெற்காசியப் பிராந்தியத்தில் சமாதான முன்னேற்றத்தையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டும் முகமாகவும் மிக நெருங்கிச் செயலாற்ற ஆவலாயுள்ளோம்.”

– இவ்வாறு இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியீட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-

“தற்போது நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது தடவையாகவும் ஆட்சியமைப்பதற்கு பாரத மக்களது நம்பிக்கையைப் பெற்ற தங்களுக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய மக்களுக்குத் தொடர்ந்தும் அயராது சேவையாற்றும் தங்களுக்கும் தங்கள் அரசுக்கும் எமது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எதிர்வரும் வருடங்களில் தங்களது தலைமைத்துவத்தின் கீழ் பல மைல் கற்களை நீங்களும் இந்திய மக்களும் அடைய நாம் பிரார்த்தனை செய்கின்றோம்.

இத்தருணத்தில் இலங்கை மக்களுக்கு விசேடமாகத் தமிழ் பேசும் மக்களுக்கு தங்களது அரசும் இந்தியாவும் நல்கிய அனைத்து உதவிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

தொடர்ந்தும் வருங்காலங்களில் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு நிறைவான நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான ஒரு நிரந்தரத் தீர்வை எட்டும் முகமாகவும் மேலும் தெற்காசியப் பிராந்தியத்தில் சமாதான முன்னேற்றத்தையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டும் முகமாகவும் மிக நெருங்கிச் செயலாற்ற ஆவலாயுள்ளோம்.

மீண்டுமொருமுறை தமிழ் பேசும் மக்களின் சார்பில் தங்களது உயரிய பதவியில் நீங்கள் திறம்பட செயலாற்ற எனது மனமார்ந்த வாழ்த்துதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” – என்றுள்ளது.

No comments