பறிபோகிறது ரிஷாத்தின் பதவி

அமைச்சர் ரிஷார்ட் ,ஆளுநர்மார் அசாத் சாலி ,ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலக வலியுறுத்தி கண்டியில் இன்று உண்ணாவிரத போராட்டத்தை அத்துரலியே ரத்தன தேரர் ஆரம்பித்துள்ளமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நம்பகரமாக அறியமுடிந்தது.இதனால் அவர் அதிரடியான சில முடிவுகளை எடுக்கத் துணிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இன்று காலை புதுடில்லியில் தன்னுடன் தங்கியுள்ள இலங்கை அமைச்சர்களுடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சு நடத்திய ஜனாதிபதி மைத்ரி , ரத்தன தேரரின் கோரிக்கையை கவனிக்கவேண்டிய அவசியம் எழுந்துள்ளதை குறிப்பிட்டு கூறியிருக்கிறாரென அறியமுடிந்தது.பின்னர் அவர் அங்கிருந்து ரணிலுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தி இந்த சர்ச்சைகளுக்கு ஒரு முடிவை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி இன்று இரவு நாடு திரும்பிய கையோடு அவர் முக்கிய பல தீர்மானங்களை எடுப்பாரென சொல்லப்பட்டது.அதன்படி அமைச்சர் ரிஷார்த் பதியுதீன் தற்காலிகமாக பதவி விலக ஜனாதிபதி கோரவுள்ளாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.முன்னதாக ஜனாதிபதியின் தொலைபேசி உரையாடலையடுத்து இன்று முற்பகல் அமைச்சர் ரிஷார்ட்டுடன் பிரதமர் ரணில் அலரி மாளிகையில் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

அத்துரலியே ரத்தன தேரர் மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் அதற்கு முன் முடிவுகளை எடுப்பதென்றே ஜனாதிபதி மைத்ரி இன்று மாலை இறுதி முடிவுக்கு வந்துள்ளாரென அறியமுடிந்தது.

No comments