ரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று கையளிப்பு

சிறிலங்காவின் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்படும் அதுரலியே ரத்தன தேரர், அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று ஒரு தொகுதி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டனர்.

டலஸ் அழகப்பெரும, சமல் ராஜபக்ச, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன, மகிந்தானந்த அழுத்கமகே, நாமல் ராஜபக்ச, வியாழேந்திரன், எஸ்.பி திசநாயக்க உள்ளிட்ட 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் தவறுகள் இருப்பதாகவும், இதனைச் சமர்ப்பிக்க வேண்டாம் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

அத்துடன் இந்த முயற்சிக்கு பசில் ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் கூட ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், இந்தப் பிரேரணைக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவு அளிப்பதாகவும், இதுதொடர்பாக வெளியாகிய தகவல்களில் உண்மையில்லை என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில், நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக, பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நேற்று மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

No comments