யேர்மனியில் நடைபெற்ற தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பத்தாம் ஆண்டு தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் முடிந்திருக்கலாம் ஆனால் எமது போராட்டம் முடியவில்லை - யேர்மனியில் எழுச்சியுடன் 2009 ஆண்டுக்கு பிற்ப்பாடு வரலாறு கண்ட அணி அணியாக திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்களுடன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் நாள்.


ஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில் நடாத்திய தமிழின அழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் இன்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் எழுச்சியுடன் நடைபெற்றது. பிற்பகல் 14:00 மணியளவில் டுசில்டோர்ப் தொடரூந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பித்த அணியாகத் திண்ட மக்களின் பேரணி , கொட்டொலிகள் , பதாதைகள் அடங்கலாக லன்ராக்  நிகழ்வுத் திடலை நோக்கி நகர ஆரம்பித்தது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புக் கொடூரங்களை நினைவுபடுத்திய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். வீதியின் இருமருங்கிலும் நின்ற யேர்மனிய மற்றும் வெளிநாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோக்கிக்கப் பட்டன. எமது மண்ணில் நடைபெற்ற தமிழின அழிப்பினை நினைவுபடுத்தும் வகையில், அதற்கு நியாயம் கோரும் வகையிலும் எழுப்பப்பட்ட கொட்டொலிகள் வெளிநாட்டவர்களின் கவனத்தை மிகவும் கூர்மையாக ஈர்த்தன.

சரியாக பிற்பகல் 16:15 மணியளவில் பேரணி நிகழ்வுத்திடலை அடைய, தமிழின அழிப்பு நாள் நினைவு நிகழ்வுகள் ஆரம்பித்தன. நிகழ்வின் பொதுச்சுடர் ஏற்றிவைக்க தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை , யேர்மனிய எசன் நகரப்பிரதிநிதி ஏற்றிவைத்தார். பொது ஈகைச் சுடரினை தமிழீழ மண்ணிற்காகத் தமது இன்னுயிரை ஈந்த மாவீரரின் சகோதரன் ஏற்றிவைக்க, அதனைத் தொடர்ந்து , வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும் , இனவழிப்பில் சாவைத் தழுவிய தமிழீழ மக்களிற்குமான மலர், சுடர் வணக்கம் இடம்பெற்றது.

தொடர்ந்து பாடல்,கவிதை,சிற்றுரைகள் ,நுல்வெளியீடு ,தாயக எம் உறவுகளின் அவலநிலையை எடுத்துரைக்கும் குறும்நாடகம்,நடனங்கள் என முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த நிகழ்வுகள் ஆகியன நடைபெற்றன.

வேற்றுநாட்டவர்களாக இருப்பினும், தமிழர்களது இனவழிப்பினை நன்கு அறிந்த யேர்மனிய இடதுசாரிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் எமது மக்களுக்காக கடந்த 30 வருடங்களாகாக குரல் கொடுத்துவரும் கத்தோலிக்க மதகுரு அவர்களும் தமிழீழ மக்களின் அவளநிலையை புரிந்துகொண்டு எடுத்துரைத்து உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தமது பேச்சுக்களில் மிக தெளிவாக தமிழர்களுக்கு நடந்தது இனஅழிப்பு என்றும் அத்தோடு இதற்கு சர்வதேச நாடுகள் தமது பூகோள அரசியல் நலனுக்கு அமைய துணையாக சென்றதையும் சுட்டிக்காட்டினார்கள் .இவர்கள் எதிர்காலத்திலும் தமது கட்சியின் சார்பில் தமிழர்களின் விடுதலைக்கு முழுமையாக உழைப்பார்கள் எனவும் உறுதி கூறினார்கள் .

இறுதியாக சிறப்புரையினை நிகழ்த்திய, மணித நேய செயல்ப்பாட்டாளர் திரு அவர்கள் , சிறீலங்கா அரசாங்கத்தின் கொடுமைகளை வெளிக்கொணர வேண்டிய அவசியமும், எமது விடுதலைக்கான உரிமையைப் பெற்றுக்கொள்ளும் அவசியமும் எமது கைகளிலேயே தங்கியுள்ளது என்றும், நாம் போராடிப் பெறவேண்டிய உரிமையை எவரும் பெற்றுத்தரப்போவதில்லை என்றும், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களாகிய எம்மால் மட்டுமே எமது ஈழத்து உறவுகளுக்காகப் போராட முடியும் எனபதனையும் இளையோர்கள் வெளிநாட்டு அரசியல் நீரோடையில் இணைந்து எமக்கான தீர்வான வலி சுமைகளை எடுத்துகூற வேண்டும் என தனது உரையில் சிறப்பாகத் தெளிவுபடுத்தினார் .

நிகழ்வில் இடம்பெற்ற தமிழ் இளையோர்களின் குறும்நாடகம் அனைத்து மக்களின் கண்ணீரை வரவைத்ததுடன் எமது தாயக உறவுகளுக்காக தொடர்ந்து அயராது போராடவேண்டும் எனும் ஓர்மத்தை உருவாக்கியது .

முடிவில், சகல விதங்களிலும் நிகழ்வுகளிற்கு ஒத்துழைப்பு வழங்கிய யேர்மனியக் காவல் துறையினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் என்ற பாடல் ஒலித்து நிறைவடைய , தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்தோடு தமிழின அழிப்பு நாள் நினைவு நிகழ்வுகள் சரியாக 18:30 மணியளவில் தேசியக்கொடி இறக்கத்தோடு நிறைவு பெற்றன.

No comments