மூன்று தேர்தல்களுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தல்

இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலும் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பின் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்திருக்கும் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ. அமல்ராஜ் இந்த மாதம் 15ம் தேதி முதல் கிராம சேவகர் ஊடாக விநியோகிக்கப்படவிருக்கும் வாக்காளர் பதிவு விண்ணப்பப் படிவங்களை பொதுமக்கள் பெற்று விண்ணப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

2020ஆம் ஆண்டு கண்டிப்பாக 3 தேர்தல்களை எதிர்கொள்ளும் ஆண்டாக இருக்கும் சிலவேளையில் மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்டு இடம்பெறலாம். வாக்காளர் இடாப்பு  வருடாந்தம் மீளாய்வு செய்யப்படுகின்றது. ஏனெனில் தேர்தலின்போது இறுதி ஆண்டு வாக்காளர் இடாப்பு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

வாக்காளர் பட்டியல் மூடினால் எந்தச் சந்தர்ப்பத்திலும் அடுத்த ஆண்டு இடம்பெறும் தேர்தல்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை இழக்க வேண்டிய நிலமை ஏற்படும்.

15 பிரதேச செயலகத்தில் 10 பிரதேச செயலகங்களின் கிராம அலுவலகர்கள் சந்திப்பு நிறைவு செய்யப்பட்டு விட்டன. மே மாதம் 15ம் திகதி முதல் பீ.சி படிவங்கள் விநியோகம் இடம்பெறும்.

யூன் 01ஆம் திகதி வாக்காளர் பதிவு தினம் என்பது சட்டமாகும். அதனால் அதன் பின்பே வீடுகளில் இருந்து படிவங்களை கிராம சேவகர்கள் படிவங்களை கையேற்பர். இதற்கு அரசியல் கட்சிகளும் முகவர்களை நியமிக்க முடியும். அதற்கு எந்தக் கட்சியும் முகவரை நியமிக்கவில்லை.

தேர்தல் மட்டுமன்றி வாக்காளர் பதிவும் மிக முக்கியமானது. வாக்குரிமையின் பெறுமதி தொடர்பில் குறைந்த நிலமையே கருதப்படுகின்றது.

வாக்களர் பதிவு தொடர்பில் அரச உத்தியோகத்தர்கள் முதல் சாதாரண குடிமகன் வரையில் வாக்காளர் பதிவு தொடர்பில் போதிய அக்கறையின்மையும் கானப்படுகின்றது. மக்களின் உரிமையில் மிக உச்சமானதான வாக்குரிமை அதற்கு வாக்காளர் பதிவு கட்டாயமானது.

விநியோகம் செய்யப்பட்ட படிவங்கள் யூன் 14ம் திகதிக்கு முன்பு வீடுகளிற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு பொது அறிவித்தல் வழங்கினாலும் ஊடகங்களின் பங்கே மிக முக்கியமானது - என்றார்.

No comments