கொழும்பு நாரஹேன்பிட்டியில் 23 பேர் கைது

கொழும்பு- நாரஹேன்பிட்டிய பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து நேற்று நடத்திய தேடுதலில் – பெண் ஒருவர் உள்ளிட்ட 23 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுக்காலை 7 மணி தொடக்கம், பிற்பகல் 3 மணிவரை இந்த தேடுதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தேடுதல்களின் போது, 15 கிலோ வெடிமருந்துகள், ஆறு காட்டுக் கத்திகள், இராணுவ தொப்பிகள், 14 துப்பாக்கி ரவைகள், 29 அலைபேசிகள், பல தொடர்பாடல் கருவிகள், மற்றும் போதைப் பொருட்கள் உள்ளிட்டவை ஐந்து வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

அனுராதபுரவில் சி-4 வெடிமருந்துடன்  இருவர் கைது

அனுராதபுரவில் நேற்று நடத்தப்பட்ட தேடுதல் ஒன்றின் போது, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின், இரண்டு உறுப்பினர்கள், சி-4 வெடிமருந்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுர – மத்துகம பகுதியில் உள்ள இஸ்லாமிய மத பாலர் பாடசாலை ஒன்றில் சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று தேடுதல் நடத்தினர்.

அங்கிருந்து, 168 கிராம் சி-4 வெடிமருந்து, டெற்றனேற்றர்கள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத பரப்புரை வெளியீடுகள் கைப்பற்றப்பட்டன.

நிலவிரிப்புக்குக் கீழ் வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பாலர் பாடசாலைக்கு பொறுப்பானவரும், மற்றொருவரும் கைது செய்யப்பட்டனர். மற்றொருவர் தேடப்பட்டு வருகிறார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இந்த தேடுதல் நடத்தப்பட்டது.

குருணாகல மருத்துவமனையில் மேலும் பல தவ்ஹீத் ஜமாத் செயற்பாட்டார்கள்

தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட குருணாகல மருத்துவமனையின் மருத்துவர் செய்கு சியாப்தீன் மொகமட்டுடன் தொடர்புடைய மேலும் பலர் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குருணாகல போதனா மருத்துவமனையில் பணியாற்றும் மேலும் சில சந்தேக நபர்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை கைது செய்யப்பட்ட மருத்துவர் செய்கு சியாப்தீன் மேலதிக விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments