முற்றுகைக்குள் ராணுவம்! விலக மறுக்கும் மக்கள்!

சூடான் தலைநகர் கர்தோமில் ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்,

சூடானில் ராணுவம் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சி அதிகாரத்தை அரசியல் தலைமையிடம் ஒப்படைக்க கோரி ஆயிரக்கணக்கானோர் ராணுவ தலைமையத்தை முற்றுகையிட்டு  வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சூடான் அதிபராக நீண்டகாலம் பதவி வகித்து வந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக, இனப் படுகொலை உள்ளிட்ட வழக்குகளில் சர்வதேச நீதிமன்றம் 2 கைது பிடியானைகளை பிறப்பித்தது. இதையடுத்து, அவருக்கு எதிராக அந்தநாட்டில் மாபெரும் போராட்டம் வெடித்ததன் விளைவாக, பஷீரை பதவி நீக்கம் செய்துவிட்டு, ஆட்சி பொறுப்பை ராணுவ கவுன்சில் ஏற்றது. இதைத் தொடர்ந்து, சூடான் அதிபராக ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அவத் இபின் அல்ப்  பதவியேற்றார்.
ஆனால் ராணுவ தளபதி அதிபரானதை விரும்பாத மக்கள், அவருக்கு எதிராக  போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அவத் இபின் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
புதிய அதிபராக, ஜெனரல் அப்தல் பட்டா அல் -பர்கான் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன், சூடானில் இரவோடு இரவாக, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். அரசியல்வாதிகளை கைது செய்து சிறையில் அடைத்தார். இதற்கு, உலக நாடுகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இதையடுத்து, இரவு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற்றதுடன், அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் ராணுவ ஆட்சியாளர் பர்கான் உத்தரவிட்டுள்ளார். அவரது இந்த நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

எனினும் இந்த நிலையில், கர்தோமில் உள்ள ராணுவ தலைமையகம் முன்பு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடி அதிகாரத்தை மக்களாட்சி மன்றத்திடம் ஒப்படைக்க கோரி வியாழக்கிழமை இரவு முழுவதும் முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர்.
அதிபர் பர்கான் தனது ஆட்சி அதிகாரத்தை அரசியல் தலைமையிடம் ஒப்படைக்கும் வரையில் இந்த இடத்தை விட்டு போகப்போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்,


No comments