கடுமையாக்கப்படும் சமூக வலைத்தளச் சட்டம்!

பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்காக சிங்கப்பூர் அரசு உருவாக்கி வரும் மிகக் கடுமையான சட்டத்துக்கு முகநூல், கூகுள், சுட்டுரை (டுவிட்டர்) போன்ற வலைதள நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சமூக வலைதளங்கள் மூலம் பொய்யான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கான புதிய சட்ட மசோதாவை சிங்கப்பூர் அரசு கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது.

அந்த மசோதாவில், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகள் பொய்யானவை என்று அதிகாரிகள் கருதினால் அந்தப் பதிவாளரை எச்சரிக்கும்படி சமூக வலைதளங்களுக்கு உத்தரவிட அமைச்சர்களுக்கு அதிகாரம் அளிக்கும் யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூரின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கருதப்பட்டால் வலைதள நிறுவனங்களுக்கு 7.4 லட்சம் டாலர் (சுமார் ரூ.5 கோடி) வரை அபராதம் விதிக்கவும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் அந்த சட்ட மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முகநூல், சுட்டுரை, கூகுள் போன்ற முன்னணி வலைதள நிறுவனங்கள் அங்கம் வகிக்கும் "ஆசியா இன்டர்நெட் கோயலேஷன்' அமைப்பு கூறுகையில், சிங்கப்பூர் அரசின் வலைதளக் கட்டுப்பாட்டுச் சட்டம், இதுவரை எந்த நாட்டிலும் உருவாக்கப்படாத அளவுக்கு மிகக் கடுமையானது எனக் குறிப்பிட்டது.

மேலும், அந்தச் சட்டத்தால் கருத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்துக்கு ஆபத்து நேரிடும் என்றும் அந்த அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

No comments