தந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு - பனங்காட்டான்

தமிழ் காங்கிரஸிலிருந்து வெளியேறிய தந்தை செல்வா சமஷ்டியை முன்வைத்தார். 1977ல் தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கியபோது சுதந்திரத் தமிழரசை ஏகமனதாகக் கேட்டார். அவரது
தனயர்கள் இப்போது எல்லாவற்றையும் கைவிட்டு பிளவுபடாத இலங்கை நாடு வேண்டுமென்று கேட்கிறார்கள். அதற்காகத்தான் தெற்கில் போட்டியிடப்போவதாக மாவை சேனாதிராஜா சொல்கிறார் போலும். 

இலங்கை அரசியலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இப்போது மகாசக்தியாக உருவெடுத்துள்ளது.

எவராலும் செய்ய முடியாத அல்லது செய்ய நினைக்க முடியாதவைகளை இவர்கள் இப்போது செய்து முடித்து சாதனையாக்கி வருகிறார்கள்.

பிரதமர் பதவி பறிக்கப்பட்டு 51 நாட்கள் அலரி மாளிகைக்குள் முடங்கிக் கிடந்த ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமர் கதிரையில் அமர்த்தியது கூட்டமைப்பு.

நானே ராஜாதி ராஜா என்று திக்விஜயங்கள் மேற்கொண்ட புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவை, அப்பதவிக் கட்டிலிலிருந்து கிழே இறக்கியதும் கூட்டமைப்பே.

இவ்விரு நடவடிக்கைகளிலும் ஜனாதிபதி மைத்திரிக்கு பெரிய நாமம் போட்டு தலைகுனிய வைத்ததும் கூட்டமைப்புதான்.

அப்படியென்றால், கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனின் எதிர்கட்சித் தலைவர் பதவி பறிபோனது எவ்வாறு என்று எவரும் கேட்கக் கூடாது! அது பெரும் ராஜதந்திரம் என்று பதில் கூறுவார் எல்லாம் தெரிந்த சுமந்திரன்.

இதற்குப் பின்னர்....

ஜெனிவாவில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால நீடிப்பு பெற்றுக் கொடுத்தது கூட்டமைப்பு.

ரணில் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை தோல்வியடையாது காப்பாற்றி வெற்றிகரமாக நிறைவேறச் செய்ததும் கூட்டமைப்பு.

மைத்திரியின் சுதந்திரக் கட்சி பகி~;கரிக்க, மகிந்தவின் பொதுஜன முன்னணி எதிர்த்து வாக்களிக்க, கூட்டமைப்பின் 14 வாக்குகள் ரணில் அரசை கவிழாமல் காப்பாற்றின.

கண்மூடித்தனமான இந்த ஆதரவு தொடர்ந்து கொண்டேயிருக்கப் போகிறது. ரணிலின் ஆட்சிக்கு முண்டு கொடுப்பதே கூட்டமைப்பின் தலையாய பணியாகிவிட்டது.

இத்தனையும் எந்த நிபந்தனையுமின்றியே இடம்பெறுவதாகவும், ரணில் அரசிடம் எந்த நிபந்தனையையும் தாங்கள் வைக்கவில்லையென்றும் கூட்டமைப்பு பகிரங்கமாகச் சொல்லி வருகிறது.

ரணிலின் ஆட்சிக்கு நெருக்கடி வரும் நேரங்களில், இனம்சார் நன்மை கருதி சில நிபந்தனைகளுடன் அல்லது கனவான்கள் ஒப்பந்தத்துடன் கூட்டமைப்பு ஆதரவு வழங்க ஏன் பின்னிற்கிறது?

மகிந்த மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற அனுமதிக்கக் கூடாதென்றால், ரணிலை தொடர்ந்து ஆதரிப்பது கட்டாயமென்பது கூட்டமைப்பின் பதில்.

இனத்தை விற்று சிங்கள ஆட்சியை கூட்டமைப்பு காப்பாற்றத் தேவையில்லையென்பது தாயகத் தமிழர்களில் பெரும்பான்மையானோரின் கருத்து.

கரம்பெலிய என்ற பெயரிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு ரணில் விக்கிரமசிங்க கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி ரீதியாக கோடிக்கணக்கான பணத்தை வழங்கியிருப்பதாகவும், இதற்கு நன்றிக் கடனாகவே இவர்கள் ஆதரவு வழங்குவதாகவும் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டினர்.

தற்போதைய அரசின் நான்காண்டுப் பதவிக்காலம் முடிந்துவிட்டது. எஞ்சியுள்ள ஒரு வருடத்தில் அரசியல் தீர்வு எதுவும் கிடைக்கப்போவதில்லையென்பதை கூட்டமைப்பினர் நன்கு புரிந்துள்ளனர்.

எனவே, இனி அரசியல் தீர்வு என்பதை மறந்துவிட்டு அபிவிருத்தியைப் பார்ப்போம். அதற்காக சந்தர்ப்பம் கிடைக்கின்ற போதெல்லாம் ரணிலுடன் பணப்பேரம் பேசுவோம் என்ற நிலைக்கு கூட்டமைப்பு வந்துவிட்டது போலும்!

அடுத்தடுத்து தேர்தல்கள் வரப்போகின்றன. இதற்கு கரம்பெலிய பணம் தேவைதானே. இந்தப் பணத்தில் ஒரு பகுதி தாயகத்திலுள்ள கோவில் வீதிகளுக்கு தார் போடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனம் இப்போது கோவில் வீதிகளுக்கு வந்துவிட்டது,

கோவில்களின் புனிதமும், பக்தர்கள் அடி கழிப்பது போன்ற வழிபாடுகளையும் தார் வீதிகளில் செய்வதால் அதன் மதரீதியான பாரம்பரியம் அழிக்கப்படுகிறது என்று தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட ஆரம்பித்துள்ளன. கரம்பெலிய நிதியை எவ்வாறு பயன்படுத்துவதென்பது தெரியாத நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்.

ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என்பன முடியும்வரை கரம்பெலிய நிதியும் இவர்கள் கைகளுக்கு வந்துகொண்டேயிருக்கும்.

இந்தத் தேர்தல்கள் தொடர்பான வெவ்வேறு தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

2015 ஜனவரி முதலாம் வாரம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனவின் ஐந்தாண்டுக் காலம் 2020 ஜனவரி 8ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

தேர்தல் சட்டத்தின்படி, அடுத்த ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னரான ஒரு மாத காலத்துள் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகாவுக்கும், மகிந்தவுக்கும் ஏற்பட்டது போன்ற ஒரு விபரீத ஆசை இப்போது மைத்திரிக்கும் வந்துள்ளது.

சந்திரிகா தமது இரண்டாவது பதவிக்காலத்தில் இரு தடவை பதவிப் பிரமாணம் செய்ததால், ஓராண்டுக்கு முன்னராகவே ஆட்சியிலிருந்து விலக நேர்ந்தது. மகிந்த தேர்தல் சட்டத்தை மாற்றி மூன்றாவது தடவையும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டு மண் கவ்வினார்.

மைத்திரிபால சிறிசேன 2015 ஜனவரி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் 19வது அரசியல் திருத்தத்தை நிறைவேற்றி, மூன்றாம் தடவையாக ஒருவர் ஜனாதிபதியாகப் போட்டியிடுவதைத் தடை செய்தார்.

இந்த 19வது திருத்தம் நாடாளுமன்றத்தில் 2015 யூன் மாதமே நிறைவேற்றப்பட்டு சபாநாயகர் ஒப்பமிட்டதால், தமது தற்போதைய பதவிக்காலம் 2020 யூன் மாதம் வரையானதாக இருக்கலாமென மைத்திரி நப்பாசை கொள்கிறார்.

இதற்காக, உச்ச நீதிமன்றத்தின் கருத்தினை அறிய விரும்புகிறாரென அவரது கட்சியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இது உண்மையாக இருக்குமானால், சந்திரிகாவும் மகிந்தவும் ஏறி விழுந்த குதிரையில் மைத்திரியும் ஏறி விழ ஆசைப்படுவது தெரிகிறது.

இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்தால் உண்மை நிலைமை தெரிய வரும்.

ரணிலுடன் கூடிக்குலாவி வசதிகளை வசமாக்கிக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சில மாதங்களுக்கு முன்னர் அதிரடியாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தாங்கள் வடக்கு கிழக்குக்கு வெளியே தெற்கிலும் - குறிப்பாக கொழும்பிலும் போட்டியிடப் போவதாக இவர் அறிவித்தார்.

அடுத்த நாள் தமிழர் முற்போக்கு முன்னணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் இதற்கொரு பதிலடி கொடுத்தார். வடக்கிலும் கிழக்கிலும் தமது முன்னணி போட்டியிடும் என்பதே இவரது குண்டு.

கொழும்பில் தமிழரசுக் கட்சி தலைமை தாங்கும் கூட்டமைப்பு போட்டியிட்டால் அது தமது முன்னணிக்கு - முக்கியமாக தனது வெற்றிக்கு பாதகமாக அமையுமென்பதால் இப்படியொரு அறிக்கையை மனோ கணேசன் விட நேர்ந்திருக்கலாம்.

தற்போதுள்ள அரசியல் சூழலில் மனோ கணேசன் அணி தமிழர் தாயகத்தில் போட்டியிட்டால் கூட்டமைப்புக்கு ஏற்படக்கூடிய பாதகத்தை உணர்ந்ததால் போலும், தெற்கில் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவில்லையென்று மாவையர் மறுநாள் தெரிவிக்க நேர்ந்தது.

சில நாட்களின் பின்னர் தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்த கருத்து வித்தியாசமானது. நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பின்னர் தெற்கில் போட்டியிடுவது பற்றி தீர்மானிக்கப்படும் என்பது இந்த அறிவிப்பு.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ அல்லது கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனோ இதுபற்றி இன்னமும் வாய் திறக்கவில்லை.

கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவதென்பது சாதகமான ஒன்றல்ல. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில், ரணில் தரப்பின் கோட்டையென விளங்கும் கொழும்பில் அவர்களை எதிர்த்து கூட்டமைப்பு எவ்வாறு போட்டியிட முடியும்?

அல்லது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிட விரும்பினாலும் மனோ கணேசன் தலைமையிலான முன்னணி அதற்கு இடம் கொடுக்குமா?

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி (விஜயகலா மகேஸ்வரன்) போட்டியிடுவதை தடுக்க முடியாத கூட்டமைப்பு, கொழும்பில் ரணிலுடன் இணைந்தோ அல்லது எதிர்த்தோ போட்டியிடலாமென்பது வெறும் கனவு.

தமிழர் தாயகத்தில் மக்கள் செல்வாக்கை இழந்து வரும் கூட்டமைப்பு அந்த மக்களை உசுப்பேற்றுவதற்காக மாவை சேனாதிராஜா புதுப்புது வெடிகளை அவ்வப்போது வீசுவார்.

சுதந்திரத் தமிழரசு கேட்ட தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்த தமிழரசுக் கட்சியும், அதன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பும் பிளவுபடாத இலங்கையைக் கேட்டவாறு அடுத்த தேர்தலைச் சந்திப்பது ஒரு விசப்பரீட்சை.

இனி வரப்போகும் ஒவ்வொரு தேர்தல்களும் இவர்களுக்கு குருசேத்திரங்களாகவே அமையும்!

No comments