தமிழ் தந்தி வென்றது: நீதிமன்றம் நிராகரித்தது!


இலங்கையின் ஒற்றை ஆட்சி அரசின் அரசியல் யாப்பில் உள்ள உறுப்புரை 14 இல் கூறப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் எழுதுவதற்கான உரிமை உண்டு என்பதை யாழ் பிரதான நீதவான் நீதிமன்றம் இலங்கைப் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு அறிவித்துள்ளது.1973 ஆம் ஆண்டு இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் ஐந்தாம் இலக்கச் சட்டத்தின் கீழான 14-10-1981 அன்று வெளியிடப்பட்ட இலங்கை ஒற்றையாட்சி அரச வர்த்தமானி இதழின் இலக்கம் 162- 5யு பிரிவு நான்கில் கூறப்பட்டுள்ள தகவலைப் பாதுகாத்தல் இரகசியம் பேணுதல் உள்ளிட்ட விடயங்கள், குறிப்பாக கட்டுரை அல்லது செய்தியை எழுதியவர் தகவல் மூலத்தை வெளியிட மறுத்தால் அதனைக் கோர முடியாது என்று குறித்த வர்த்தமானி இதழில் கூறப்பட்டுள்ளதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.  

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிவில் மற்றும் சர்வதேசச் சமவாயச் சட்டம்) ஆகியவற்றின் படியும் எழுத்துச் சுதந்திரத்திரம் குறித்த உரிமைகளை யாழ் நீதிமன்றம் எடுத்துக் காண்பித்துள்ளது.

இலங்கை ஒற்றை ஆட்சி அரசியல் யாப்பில் 1995ஆம் ஆண்டு பதினொராம் இலக்க நடுத்தீர்ப்புச் சட்டத்தின் கீழ் 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கைப் பத்திரிகை முறைப்பபாட்டு ஆணைக் குழுவிற்கு, செய்திகளின் தகவல் மூலங்களையும் அதன் இரகசியத்தையும் பாதுகாக்கும் எந்தவொரு ஏற்பாடுகளும் அதிகாரங்களும் இல்லை.

கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ்த் தந்தி வார இதழில் புலிகளின் முன்னாள் தளபதி பிரிகேடியர் அமரர் பால்ராஜ் தொடர்பாக 27-05-2018 அன்று அந்நியன் என்ற புனை பெயரில் கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருந்தது.

அதனை எழுதியவரின் பெயர் விபரங்களை வழங்குமாறு கோரி, இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு யாழ் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பி (டீ) அறிக்கையை தள்ளுபடி செய்து வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே யாழ் பிரதான நீதவான் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
அத்துடன் சமீபத்தில் இடம்பெற்ற சமூக ஊடகங்கள் தொடர்பான சர்ச்சை ஒன்றில், கலிபோர்னிய மாநில அரசின் வழக்கு விசாரணையில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் யாழ் நீதிமன்றம் உதாரணமாகக் காண்பித்துள்ளது.

குறித்த வார இதழுக்கு எதிராக இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தாக்கல் செய்த பி அறிக்கை தொடர்பான மூன்றாவது விசாரணை இன்று வெள்ளிக்கிழமை யாழ் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி பீற்றல் போல், முன்னிலையில் இடம்பெற்றது.

குறித்த வார இதழின் சார்பாக சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் மன்றில் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்தார். கடந்த மாதம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் 28 ஆம் திகதி வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் விசாரணைகள் மூன்று கட்டங்களாக இடம்பெற்றன.
மூன்று கட்ட விசாரணைகளின்போதும் சட்டத்திரணி காண்டீபன் முன்வைத்த வாதங்களை நீதிபதி பீற்றர் போல் ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், இன்றைய விசாரணையின் போது மேலும் ஒரு குற்றப் பத்திரிகையை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நீமன்றத்தில் சமர்ப்பிக்க முற்பட்டனர்.

ஆனால் அதனை நீதிபதி பீற்றர் போல் நிராகரித்தார். குறித்த வார இதழின் அலுவலகம் கொழும்பில் இருக்கும்போது குறித்த கட்டுரையினால் யாழ்ப்பாணத்தில் குற்றம் எதுவும் இழைக்கப்படாத நிலையில், யாழ் நீதிமன்றத்தில் பி அறிக்கையை தாக்கல் செய்ய முடியாது. அதனை விசாரிப்பதற்கான நியாயாதிக்கம் இல்லையெனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

குற்றம் ஒன்றும் இழைக்கப்படாத நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் குற்றவியல் சட்டக் கோவையின் கீழ் பிரிவு 124 பிரகாரம் பத்திரிகையில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றை எழுதியவரின் பெயர் விபரங்களை எவ்வாறு கோர முடியுமென சட்டத்தரணி காண்டீபன் மன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிரிவு 14 இன் பிரகாரம் குற்றம் ஒன்றை இழைத்திருந்தால் மாத்திரமே பி அறிக்கையை தாக்கல் செய்திருக்க முடியுமெனவும் சட்டத்தரணி காண்டீபன் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிரிவு 14 இன் பிரகாரமும் குற்றவியல் சட்டக் கோவை 124 பிரிவின் படியும் பத்திரிகை ஒன்றில் எழுதப்பட்ட செய்தி அல்லது கட்டுரையின் விபரங்களையோ அல்லது எழுதியவரின் பெயர் விபரங்களையோ கோர முடியாதென ஊடக அமைப்புகள் ஏலவே கூறியுள்ளன.

ஆனால் இந்த விதிகளின் பிரகாரமே இலங்கைப் பயங்கரவாத தடுப்புப் பிரிவு குறித்த பத்திரிகை ஆசிரியருக்கு எதிரான பி அறிக்கையை யாழ் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிரிவு 14 இன் பிரகாரமும் அவசரகாலச் சட்டத்தின் கீழான செய்தித் தணிக்கைக்குழுவும் (உழஅpநவநவெ யரவாழசவைல) தற்போது இல்லை. அவ்வாறு செய்தித் தணிக்கைக்குழு ஒன்று இருந்தால் மாத்திரமே அந்தக் குழுவிடம் அனுமதி பெற்று குறித்த கட்டுரைகள் செய்திகளை பிரசுரிக்க முடியும்.

தமிழ்த்தேசியம் சார்ந்து தமிழ் ஊடகத்துறைக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில், யாழ் நீதிமன்றத்தில் இலவசமாக முன்னிலையானதாக சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்தார்.

ஆகவே 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிரிவு 14 இன் பிரகாரமும், அவசரகாலச் சட்டம் இல்லாத சூழலிலும் செய்தித் தணிக்கைக்குழு ஒன்று இயங்காத நிலையிலும் பிரிகேடியர் பால்ராஜ் பற்றிய கட்டுரை எழுதியவரின் பெயரைக் கோர முடியாதென ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிரிவு 14 இன் பிரகாரம் அவசரகாலச் சட்டம் தற்போது நடைமுறையிலும் இல்லை. இந்த நிலையில் வேறு நோக்கத்தின் அடிப்படையில் இந்த பி அறிக்கையை பயங்கரவாதத் தடுப்பு பிரிவு தாக்கல் செய்திருக்கலாமென ஊடக அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டிருந்தன.

No comments