முல்லையில் சிங்கள தேரவாத பௌத்த கலாச்சார சின்னம்?


வடக்கு தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட வகையில் பௌத்த சிங்கள கலாச்சார சின்னங்களை நிறுவிவிட அரசு மும்முரமாக பாடுபட்டுவருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாதிரி கிராமம் ஒன்றில் வாசலில் ஒரு சிங்கள தேரவாத பௌத்த கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் நினைவு கல் திறந்து வைக்கப்பட்டுள்ளதை சமூக செயற்பாட்டாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
அரச அமைச்சர் சஜித் பிரேமதாசவின்; வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார விவகாரங்கள் தொடர்பாக அமைச்சின் கீழ் வரும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நிர்மாணித்து திறந்து வைத்துள்ள வீடமைப்பு திட்ட குடியிருப்பிலேயே பௌத்த கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் நினைவு கல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவு கல்லில் செமட்ட செவன  என்கிற சிங்கள வார்த்தை அதற்கு நிகரான தமிழ் சமமான "யாவருக்கும் வீடு" என்பதற்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது . அதே போல மாதிரி கிராமம் என்பதற்குரிய சிங்கள பதமான கம்உதவா உபயோகிக்கப்பட்டு இருக்கிறது.

முக்கியமாக தேரவாத சிங்கள பௌத்த மதத்தை பிரதிபலிக்கும் சூரியன, சந்திரன் போன்ற சின்னங்கள், கண்டி தலதா மாளிகை வாயில் அமைப்பு , அங்கு உள்ள சந்திரவட்ட கல் , ஆகியன உபயோகிக்கப்பட்டு இந்த நினைவு கல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

நல்லாட்சி அரசாங்கம் சிங்கள தேரவாத பௌத்த மேலாதிக்க வாதத்தினை நிலைநாட்டும் வகையில் தமிழ் ஊர் பெயர்களை சிங்களமயப்படுத்தல் தொடக்கம் அம்மாச்சி உணவகத்திற்கு சிங்கள பெயர் சூட்டல் என பல அத்துமீறல்களை செய்து வருகிறது .இந்த அம்மாச்சி உணவகத்திற்கு பெயர் வைக்கும் விவகாரத்திற்கு .பல ஆண்டுகால தீர்வு வழங்கவில்லை . 99 சதவீத தமிழர்கள் வாழும் ஒரு தமிழ் பகுதியில் அம்மாச்சி என்கிற தமிழ் பெயரை தமிழ் நிறுவனம் ஒன்றுக்கு சூட்டுவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்து வருகிறது என்பது எவ்வளவு துயரமான விடயமென ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலாச்சாரம் உள்ள நாடு ஒன்றின் கலாச்சார பன்முகத்தன்மையை கூட சிங்கள அரசு ஏற்கவில்லை என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் தேவை இல்லை எனவும் அத்தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

No comments