கிழக்கின் சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு

கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 5 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பொலிஸ் பிரிவுகளில் கடந்த 26 ஆம் திகதி இரவு முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நேற்று காலை 10 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டது. எனினும், நேற்று மாலை 5 மணி தொடக்கம் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது. மீண்டும் மாலை 5 மணியிலிருந்து பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி சம்மாந்துறை, சாய்ந்தமருது பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் பிரிவினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றது.

தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் அங்கிகள் தயாரிக்கப்படுகின்றன எனக் கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தபோதே துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றது.

இதனையடுத்து, சந்தேகத்துக்கிடமான வீட்டில் வெடிச்சம்பவங்கள் இடம்பெற்றதுடன், குறித்த வீட்டிலிருந்து வீட்டிலிருந்து, 6 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 6 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

குறித்த வீட்டுக்குள் காயமடைந்த நிலையில் காணப்பட்ட பெண்ணொருவரையும் மற்றும் சிறுமி ஒருத்தியையும் பாதுகாப்புத் தரப்பினர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.

No comments