தவராசாவிற்கு வேலையில்லை: விக்கினேஸ்வரன்!


சுன்னாகத்தில் நீர்மாசடைவு பாதிப்புக்கள் பற்றி 2008ம் ஆண்டு தொடக்கம் சுன்னாகம் வாசிகள் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளார்கள். 2012ல் நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை இது பற்றித் தமது ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளன. வடக்கு மாகாண சபை 2013 செப்ரெம்பர் மாதத்திலேயே அதிகாரத்திற்கு வந்தது. அப்போது முன்னாள் எதிர்கட்சி தலைவர் தவராசா கூட வடமாகாண சபையில் தெரிவாகி இருக்கவில்லையென முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றிரவு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் எம்மைப் பொறுத்த வரையில் மாசு ஏற்பட்ட நீர் எம் மக்களின் பாவனைக்கு உகந்ததா இல்லையா என்பதே எமது கரிசனையாக இருந்தது. மாசடைந்திருந்ததால் எதுவரையிலான மாசடைந்த நீரை பாவனைக்கு மக்கள் எடுக்கலாம் என்பதே எமது தலையாய அக்கறையாக இருந்தது. 

முன்னாள் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுவது போல் நீரில் மாசடைவுகள் எவையும் இருக்கவில்லை என்று எவருமே கூறவில்லை. நாமும் கூறவில்லை. நிபுணத்தவர் குழு அங்கத்தவர்கள் கூடக் கூறவில்லை. நீதிபதிகளின் தீர்மானத்தின் படி 2008ம் ஆண்டு தொடக்கம் பாதிப்பு ஏற்பட்டு 2012, 2013, 2014 வரை அப்பாதிப்பு நீடித்தது. ஆனால் 2015ல்; அவற்றின் தாக்கம் குறைந்து கொண்டுவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள். வடமாகாணசபையால் நிபுணத்துவர் குழு நியமித்து அவர்களின் அறிக்கை 2015ஆண்டு செப்ரெம்பரிலேயே சமர்ப்பிக்கப்பட்டது. 

நிபுணத்துவர் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் போது நிலத்தடி நீரின் எண்ணெய்த்தன்மை குறைந்து வந்தது என்று கூறியதை மத்திய சூழலிய அதிகாரசபையின் 2015ம் ஆண்டின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது என்பதை உச்சநீதிமன்றம்; தெளிவுபடுத்தியுள்ளது.

ஆகவே இவ்வாறான குறைந்து செல்லுந்தன்மையை 2016ம் ஆண்டில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன் என முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ள உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நட்டஈடு செலுத்தவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையிலேயே வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் மீது சி.தவராசா குற்றஞ்சுமந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments