அரசியல் கைதிகள் விவகாரம்:அல்வா கொடுத்த ரணில்!


தமிழ் அரசியல் கைதிகளது  விடுதலை பற்றி பரிசிலீப்பதாக சொல்லி வந்த ரணில் அரசு தற்போது அவர்களுள் 54 பேர் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளமை மிகப்பெரும் ஏமாற்று நாடகமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ள தகவலில் தடுப்பிலுள்ள 54 அரசியல் கைதிகள் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

மேலும் 3 பேர் தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாவும், மேலும் 6 பேர் தொடர்பாக இன்னும் காவல்துறை விசாரணைகள் முடிக்கப்படாதிருப்பதால் அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குழுநிலை விவாதத்தின் போது தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியிருந்த நிலையிலேயே அவர் வழக்கு தாக்கல் பற்றி தெரிவித்திருந்தார்.

ரணில் அரசு தனது ஒவ்வொரு வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போதும் கூட்டமைப்பின் ஆதரவை பெற அரசியல் கைதிகள் விடுதலை பற்றி பேசுவது வழமையாகும்.

இம்முறை அவ்வாறு விடுவிப்பதாக சொன்ன அரசியல் கைதிகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விபரத்தினை கூறியுள்ளனர்.

இதன் பின்னரும் கூட்டமைப்பு தனது ஆதரவை வரவு செலவு திட்டத்திற்கு வழங்குமாவென்பது கேள்விக்குறியே என அரசியல் கைதிகளது விடுதலைக்கான அமைப்பின் தலைவர் வணபிதா சக்திவேல் அடிகளார் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments