மன்னார் புதைகுழி:மீளாய்வுக்கு கோரும் விக்கினேஸ்வரன்!
மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வு அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அமெரிக்காவில் நடத்தப்பட்ட காபன் ஆய்வு அறிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள், சந்தேகங்கள் வெளிவரும் நிலையில், சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.
மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் 1499 ஆம் ஆண்டுக்கும் 1719 ஆண்டுக்கும் இடைப்பட்டதென காபன் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட எலும்புக் கூடுகள் மன்னார் புதை குழியில் இருந்து மீட்கப்பட்டவை அல்ல என்று மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சிலரும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
இவ்வாறனதொரு நிலையில் மன்னார் புதைகுழி விவகாரம் குறித்துச் சந்தேகம் வெளியிட்ட முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டவை என்றும் வேறு எலும்புக்கூடுகள் எதுவும் அனுப்பப்படவில்லையெனவும் கொழும்பில் இயங்கும் இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகத்தின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
Post a Comment