எந்த நேரத்திலும் அரசைக் கவிழ்ப்போம் - மகிந்த எச்சரிக்கை

“ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசைக் கவிழ்ப்பதற்கு நாம் எப்போதும் தயாராகவுள்ளோம். எந்த நேரத்திலும் இந்த அரசு கவிழும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

சித்திரைப் புத்தாண்டு பாரம்பரிய முறைப்படி தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வு பெல்லன்வில ரஜமகா விகாரையில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவும் கலந்துகொண்டனர். நிகழ்வின் இறுதியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசைக் கவிழ்க்கும் உரிமை எமக்கு உள்ளது. பெரும்பான்மைப் பலத்துடன் அரசைக் கவிழ்த்தே தீருவோம்.

இன்று மின் துண்டிப்பு, நீர் மற்றும் அதிக வரி காரணமாக மக்கள் துன்பப்படுகின்றனர். இதனை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம். அரசைக் கவிழ்த்தே தீரவேண்டும்.

எதிர்காலத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் நாம் வெற்றி பெறுவோம். எமது சகல கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்மானித்து, உறுதியாக வெற்றி பெறக்கூடியவரையே ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவோம். அவசரப்பட்டு தீர்மானம் எதனையும் நாம் எடுக்கமாட்டோம்” – என்றார்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மஹிந்த, “அது கோட்டாபய மீது சிலருக்கு இருக்கும் பயத்தை வெளிக்காட்டுகின்றது” – என்றார்.

No comments