ஈரானின் பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா

ஈரானின் பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். 

‘ஈரான் அரசாங்கம் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது. அதன் புரட்சிகர பாதுகாப்புப் படை பயங்கரவாத செயல்பாடுகளில் பங்கேற்பதுடன், அதற்கு நிதியுதவி அளித்து, அதை அரசாங்கத்தின் செயல்பாட்டு கருவியாக ஊக்குவிப்பதை அமெரிக்க அரசு உறுதி செய்கிறது. ஈரான் மீதான அழுத்தத்தை கணிசமான அளவில் அதிகரிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளோம். நீங்கள் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையோடு தொழில் செய்கிறீர்கள் எனில் அது பயங்கரவாததிற்கு நிதியுதவி செய்வதற்கு சமம்" என்று டிரம்ப் தெரிவித்தார். 

மற்றொரு நாட்டின் ராணுவத்தை அமெரிக்கா பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பது இதுவே முதல் முறை. டிரம்பின் இந்த அறிவிப்பு இன்னும் ஒரு வாரகாலத்தில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்நாட்டின் மீது அமெரிக்காவால் கூடுதல் தடைகளை விதிக்க முடியும். 

ஆனால், இந்த நடவடிக்கைக்கு சற்றும் அஞ்சாத ஈரான் அரசு, பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு பகுதியில் செயல்படும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

No comments