காணாமல் போனோருக்கான பணியகத்தை மூடிவிடுங்கள் - ஹர்ஷ டி சில்வா


தனது அனுமதியின்றி 40/1  தீர்மானத்தில் கையெழுத்திடப்பட்டது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறுவாரெனின், ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான பணியகத்தை மூடுவதற்கு அவர் உத்தரவிட வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

“காணாமல் போனோருக்கான பணியகத்தை ஜெனிவா தீர்மானத்துக்கு அமைவாகவே உருவாக்கினோம். ஜெனிவா தீர்மானத்தில் இருந்து விலக வேண்டும் என்றால், காணாமல் போனோருக்கான பணியகத்தை தொடருவதில் அர்த்தமில்லை. அதனை கலைத்து விடுவது நல்லது.

காணாமல் போனோர் தொடர்பாக, 15 ஆயிரம் முறைப்பாடுகளை இந்தப் பணியகம் பெற்றிருக்கிறது. இதில், 14 ஆயிரம் பேருடைய முறைப்பாடுகளை, சிறிலங்கா அதிபர் செயலகமே அனுப்பி வைத்திருந்தது.

அவ்வாறாயின், இந்தப் பணியகம் இயக்க வேண்டும் என சிறிலங்கா அதிபர் விரும்புகிறார் என்றே கருத வேண்டும்.

சிறிலங்கா அதிபர் உண்மையிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கோ, காணாமல்போனோருக்கான பணியகத்துக்கோ எதிரானவர் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

அவரை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர் என தோன்றுகிறது. சிறிலங்கா அதிபர் தவறாக வழிநடத்தப்படக் கூடாது. அதற்கு பதிலாக அவர் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

காணாமல் போனோருக்கான பணியகம், சிங்கள, தமிழ், முஸ்லிம் என, காணாமல் போன அனைத்து மக்களின் பிரச்சினைகளையும் கவனித்துக் கொள்கிறது.

நான் இதனைக் கூறும்போது சிறிலங்கா அதிபர் என் மீது ஏமாற்றம் அடையலாம்.  ஆனால் நான் இதனைக் கூற வேண்டியுள்ளது.

வரும் தேர்தல்களை முன்வைத்து  அரசியல் ஆட்டங்களை ஆடக் கூடாது” என்றும் அவர் கூறினார்.

No comments