5ஜி அதிவேக இணைய சேவையைத் தொடங்கியது தென்கொரியா

தென் கொரியாவில் நாடு தழுவிய அளவில் 5ஜி அதிவேக இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்குவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாள் முன்னதாக புதன்கிழமை இரவு 11 மணிக்கு சேவை தொடங்கப்பட்டுவிட்டது.

உலகிலேயே மிக அதிவேக இணையச் சேவையை தொடங்கியிருக்கும் முதலாவது நாடு தென் கொரியா. அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கிடையே, முதன் முதலாக அதிவேக இணையச் சேவையை தொடங்குவது யார் என்ற போட்டி நிலவியது.
இந்நிலையில் தென்கொரியாவில், தொலைத்தொடர்புத்துறையில் முன்னணியில் இருக்கும் எஸ்.கே.டெலிகாம், கேடி மற்றும் எல்ஜி யுபிளஸ் ஆகியவை இச்சேவையை தொடங்கியுள்ளன.

அமெரிக்காவின் வெரிசான் நிறுவனம் 5ஜி இணையச் சேவையை தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதை முந்திக் கொள்ளும் நோக்கில் தென்கொரிய நிறுவனங்கள், இரண்டு நாட்களுக்கு முன்னதாக 5ஜி சேவையை தொடங்கியுள்ளன.

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் 5ஜி ஏற்கெனவே கிடைக்கப்பெறுவதாக அந்நாடு கூறி வந்தாலும், பொதுமக்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வசதிகள் அவர்களிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments