29வது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம். - யேர்மனி, லான்டவ்

தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது ஆண்டுவிழா வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் எனும் முழக்கத்துடன் யேர்மனியின் தென்மேற்கு
மாநிலங்களில் உள்ள தமிழாலய மாணவருக்கான மதிப்பளிப்பு நிகழ்வாக 7.4.2019 சனிக்கிழமை யேர்மனி ஒபன்பாக் நகரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

காலை பத்துமணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் இந்த மாநிலத்தில் உள்ள தமிழாலயங்கள் பங்குபற்றியிருந்தன. 2018 ஆம் ஆண்டு பொதுத்தேர்விலும், கலைத்தேர்விலும், தமிழ்த்திறன் போட்டியிலும்,  யேர்மனி முழுவதுமாகத் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவர்களுள் இந்த மாநிலத்தில் உள்ள மாணவர்கள்; மதிப்பளிக்கப்பட்டனர்.

 பிரதம விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் திரு. அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும், மற்றும் யேர்மனியின் தேசியச் செயற்பாட்டாளர்களும். யேர்மனியில் இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றிய தமிழ் வாரிதிகளும் தமிழ்மானிகளும் கலந்து கொண்டனர்.  மண்டப வாசலில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்கள், ஆகியோர் இவர்களை அழைத்துச் செல்ல மண்டபத்திற்குள் பெற்றோர்களும், பார்வையாளர்களும்  எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.

பின்பு மங்கலவிளக்கு ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழாலய மாணவர்களின் தமிழாலய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. வரவேற்புரையை தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் ஆற்றினார், பின்பு கலைநிகழ்வுகளுடன் மதிப்பளிப்புக்களும் ஆரம்பமாகின. தமிழ்க் கல்விக் கழகத்தின் இளைய செயற்பாட்டாளர்களின் நெறிப்படுத்தலில் தமிழாலயங்களில் உள்ள இளையவர்களையும் இணைத்து இந் நிகழ்வை சிறப்பாக நடாத்தியிருந்தனர்.

மாணவர்களின் மதிப்பளிப்பைத் தொடர்ந்து தமிழாலய ஆசிரியர்கள்,  நிர்வாகிகள், மதிப்பளிக்கப்பட்டனர். இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தமிழ் வாரிதி என்னும்  மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.

சென்ற வருடம் யேர்மனி முழுவதிலும் உள்ள தமிழாலயங்களில் பயின்ற 270 மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பை நிறைவு செய்து மதிப்பளிப்புக்கான தகுதியைப் பெற்றிருந்தனர். இவர்களுள் 45 மாணவர்கள் இந்த மேடையில் மிகச்சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து  யேர்மனியில் உள்ள நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ்த்திறன் போட்டியிலும், கலைத்திறன் போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தமிழாலயங்களுக்கான தங்கக் கேடயங்கள் வழங்கப்பட்டது. இவற்றில் பிரைங்பூர்ட் தமிழாலயம் தமிழ்த்திறனில் 3ஆம் இடத்தையும், கலைத்திறனில் 2ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
லான்டவ் தமிழாலயம் தமிழ்த்திறனில் 1ஆம் இடத்தையும், கலைத்திறனில் 3ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. தமிழ்த்திறன் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று வெற்றியீட்டும் தமிழாலயங்களுக்கு தங்கக் கேடயத்துடன் மாமனிதர் இரா. நாகலிங்கம் விருது எனும் விருது வழங்கி கடந்த நான்கு ஆண்டுகளாக மதிப்பளிக்கப்பட்டு வந்தது.

தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் தமிழ்த்திறன் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட லான்டவ் தமிழாலயம் மாமனிதர் இரா. நாகலிங்கம் விருதினைத் தனதாக்கிக்கொண்டது. அதுமட்டுமல்லாது இந்த வருடமும் தமிழ்த்திறன் போட்டிகளில் முதலாம் இடத்தைத் தட்டிக்கொண்டு  அடுத்த சுற்றுக்கான முதற்படியாக மாமனிதர் இரா. நாகலிங்கம் விருதினை நான்காவது முறையாகப் பெற்றுக் கொண்டது. யேர்மனி முழுவதிலும் உள்ள தமிழாலயங்களில் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் தமிழ்த்திறன் போட்டிகளில் வெற்றியீட்டிய லான்டவ் தமிழாலயத்திற்கு சக தமிழாலயங்களும் ,வருகை தந்திருந்த மக்களும், வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் வாரி வழங்கினர்.

No comments