ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சின் தேசிய செயற்பாட்டாளரும்
எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று (23.03.2019) சனிக்கிழமை  Grigny    பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்தது.

காலை 10.00 மணிக்கு  Grigny   பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருப்பலி ஒபபுக்கொடுக்கப்பட்டு, அங்கு வித்துடலுக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் தமிழீழத்  தேசியக்கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து நினைவுரைகளும் இடம்பெற்றன. இதனைத்தொடர்ந்து திருப்பலியில் கலந்துகொண்ட அனைவரும் அணிவகுத்து வித்துடலுக்கு அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, வித்துடல் இறுதி நிகழ்விற்காக பிரான்சு தமிழ்ச்சோலை பள்ளி மாணவர்களின்  கொட்டொலி வாத்திய அணிவகுப்புடன் துயிலுமில்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு மதச் சடங்குகள் இடம்பெற்றன.

தொடர்ந்து துயிலும் இல்லப்பாடல் ஒலித்து ஓய்ந்ததும், தமிழீழத் தேசியக்கொடி மற்றும் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு பிரசுரம் என்பன  பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளரால் நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் துணைவியாரிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் புனித விதைகுழியில் வைக்கப்பட்ட வித்துடலுக்கு மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து குடும்பத்தினர், உறவுகள் கண்ணீர் மல்க புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது.

இந்த இறுதி நிகழ்வில் உறவினர்கள், தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள்,  நண்பர்கள், மாணவர்கள், வெளிநாட்டவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களுக்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்திருந்தனர்.

No comments