இயக்க அரசியலில் நிமிர்ந்த இனம் இணக்க அரசியலில் குனிந்து நிற்கிறது! பனங்காட்டான்

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு காலஅவகாசம் வழங்கும் விடயத்தில் கூட்டமைப்புக்கு எதிர்ப்பேதுமில்லையென்பதை மறைமுகமாகவன்றி விளங்கும் வகையில் தமிழரசுக் கட்சியின் பிரமுகர் சி.வி.கே. சிவஞானம் கருத்து வெளியிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பில் எது இல்லாவிட்டாலும் அதிகாரப் பகிர்வையாவது தரலாமே என எம்.ஏ. சுமந்திரன் வினயமாக வேண்டி நிற்கிறார்.

இது ஜெனிவாக் காலம். ஆண்டுக்கு இரு தடவை வரும் முக்கியமான காலம்.

இக்காலத்தில் பல தலைவர்கள் தமிழருக்கு இழைக்கப்பட்ட போர்க்குற்றத்துக்கு நியாயம் கோரி அறிக்கைகள் விடுவதும், கட்டுரைகள் எழுதுவதும் நவீன அரசியலாகிவிட்டது.

தங்கள் இருப்புக்காக தமிழரின் இழப்புகளை முதலீடாக்க இவர்கள் நன்கு பழகிவிட்டார்கள்.

சுற்றுலாப் பயணம்போல ஜெனிவா செல்வது சிலருக்கு வழக்கமாகிவிட்டது.

அங்கு சென்று ஓர் அறிக்கையை விடுவது, ஒரு அறைக்குள் நின்று மைக்கைப் பிடித்து உரையாற்றுவது, அதனை ஊடகங்களில் பிரசித்தம் செய்வது என்பவை தங்கள் அரசியல் எதிர்காலத்துக்கான இலவச பசளை என்று இவர்கள் கருதுகிறார்கள்.

எம்மத்தியிலுள்ள சில அரசியல்வாதிகள் ஜெனிவா சென்று தெரிவிப்பது ஒன்றாகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாக அவர்களோடு இணைந்து செயற்படுவது வேறாகவும் காணப்படுகிறது.

மக்களை மடையர்களென்று நினைத்து தம் எண்ணப்படி நடப்பது இவர்களில் ஊறிப்போய்விட்டது.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டம், காணி மீட்புக்காக நடத்தப்படும் போராட்டம், இராணுவத்தை வெளியேற்றுவதற்கான தொடர் போராட்டம் என்பவை ஆண்டுக் கணக்கில் இடம்பெறுகின்றன.

நான்காண்டுகளுக்கு முன்னர் இலங்கை அரசு அமெரிக்காவோடு இணைந்து ஜெனிவாவில் கொண்டு வந்த போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்திலிருந்து விலகப் போவதாக ஒரு செய்தி வந்துள்ளது.

அதேசமயம் ஜெனவாவில் இலங்கை மேலும் காலஅவகாசம் கேட்கப்போவதாக இன்னொரு செய்தி வந்துள்ளது.

இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கப்போவதாக மற்றொரு செய்தி தெரிவிக்கிறது.

ஆனால் கூட்டமைப்பிலுள்ள தோழமைக் கட்சியொன்றும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் காலஅவகாசம் வழங்கக்கூடாதென்ற முடிவில் உள்ளனர். இவ்விடயத்தில் கூட்டமைப்பு பிளவுபட்டிருப்பது போன்று தோற்றம் காணப்படினும், இறுதியில் எல்லாமே ஒருவரின் கைக்குள் அடங்கிவிடும்.

கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனே சுமந்திரனின் கட்டுப்பாட்டுக்குள் அடக்கமாகிப் போயுள்ள இன்றைய நிலையில் மற்றவர்கள் எம்மாத்திரம்?

ஜெனிவாவில் இலங்கை அரசுக்குக் காலஅவகாசம் வழங்குவதை தமிழரசுக் கட்சி எதிர்க்காது என்பதன் அறிகுறியாக அதன் துணைப்பொதுச் செயலாளர்களில் முக்கியமானவரான சி.வி.கே.சிவஞானம் ஒரு கருத்தை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கருத்து பின்வருமாறு அமைகிறது. 'இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் ஏற்கனவே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்தத் தீர்மானம் செயற்படுத்தப்பட வேண்டியது அவசியம். இதற்கு இலங்கைக்கு அவகாசம் வழங்குவதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது நாங்களல்ல. அது எங்கள் சிபாரிசில் வழங்கப்படுவதுமில்லை..." என்பது இவரது கருத்து.

இதனைப் படிக்கும்போது, தமிழரசுக் கட்சியே தமிழ் மக்களின் தலைமைத்துவமென்று தங்களைக் கூறிக்கொள்ளும் அக்கட்சியின் முக்கியஸ்தர் இவ்வாறு கூறினாரா என்று கேட்கத் தோன்றுகிறது.

ஜெனிவா தீர்மானம் அநியாயமாகக் கொல்லப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட போர்க்குற்றத்துக்காக கொண்டு வரப்பட்டது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்.

எனவே, ஜெனிவா தீர்மானமான போர்க்குற்ற விசாரணையை தாமதமின்றி மேற்கொண்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியது அவசியமாகும்.

இதனை மறந்து, பொறுப்பற்ற தன்மையில், இலங்கைக்கு காலஅவகாசம் வழங்குவதா இல்லையா என்பதை அவர்களே (ஜெனிவா) தீர்மானிப்பர் என்று சொல்லப்படுவதை வெறுமனே சிவஞானம் என்ற தனிமனிதனின் கருத்தாக இங்கு பார்க்க முடியாது.

இதனை, அவர் சார்ந்த தமிழரசுக் கட்சியின் கருத்தாகவும், அக்கட்சியின் முடிவாகவுமே பார்க்க வேண்டும்.

இதுதான் இவர்களின் முடிவென்றால், இவர்கள் சார்ந்த அரசியல் பிரமுகர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜெனிவா செல்ல வேண்டிய தேவையே இல்லை.

சிவஞானத்தின் கூற்றுக்குள் இன்னொரு பொருளும் புதைந்துள்ளது. அது, இலங்கை அரசுக்கு ஜெனிவா காலஅவகாசம் கொடுத்துவிட்டுப் போகட்டும். அதனால் எங்களுக்கு என்ன குறையப்போகிறது என்பதே அந்த மறைபொருள்.

இவ்வாறான கருத்து வழியாக சி.வி.கே.சிவஞானம் தம்மை சுமந்திரனின் மறு வடிவமாக அடையாளப்படுத்தியுள்ளாரென்று எண்ணத் தோன்றுகிறது.

ஜெனிவா தொடர்பாக இவர் தெரிவித்த இன்னொரு கருத்தையும் இங்கு கவனத்துக்கு எடுக்க வேண்டியுள்ளது.

'ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த வேண்டுமென்பதே எங்கள் நிலைப்பாடு. அதற்கமைய அந்தத் தீர்மானத்தை வலியுறுத்துவதே எங்கள் நிலைப்பாடு" என்ற இவரது வரிகளினூடாக இந்தத் தீர்மானத்தை இலங்கை பத்து வருடங்களின் பின்னர்  செயற்படுத்தினாலும் எங்களுக்கு பரவாயில்லையென்பதுவே.

இதற்குப் பின்னரும் இலங்கைக்கு காலஅவகாசம் கொடுப்பதை தமிழரசுக் கட்சியோ அல்லது கூட்டமைப்போ எதிர்க்குமென்று எவராவது நினைத்தால் அது மடமையாகவே இருக்கும்.

மக்களின் போராட்டம், அவர்களின் கோரிக்கை, அதற்கான உண்ணாவிரதம் என்பவைகளைப் பற்றி இந்த அரசியல்வாதிகளுக்கு எந்த அக்கறையுமில்லையென்பதை சிவஞானம் மறைவின்றிக் கூறியுள்ளார். ஜெனிவா கூட்டம் முடிவடைவதற்கு முன்னரே தங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்கூறியதற்கு மக்கள் நன்றி சொல்ல வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, புதிய அரசியலமைப்பு விவகாரம் இப்போது எந்த நிலையிலுள்ளது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

பெப்ரவரி மாதம் 28ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இது தொடர்பாக 90 நிமிட உயர்மட்டக் கூட்டமொன்று நடைபெற்றது.

பிரதமர் உட்பட சில முக்கியமான அமைச்சர்கள் இதில் பங்குபற்றினர். கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தனும் சுமந்திரனும் இதில் கலந்து கொண்டனர்.

புதிய அரசமைப்பின் உருவாக்கத்தின் முக்கியத்துவத்தை சம்பந்தன் இங்கு விளக்கிக் கூறினார்.

இக்கூட்டத்துக்கு இரு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ஆகிய மூவரும் கூடி ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைப்பது பற்றி ஆராயப்பட்ட விடயம் இங்கு பேசப்பட்டது. இவ்வேளை முறுகல் நிலையும் ஏற்பட்டது.

ஆனால் இந்த ஆட்சிக்காலத்தில் புதிய அரசமைப்பு வரக்கூடியதாக சாத்தியக்கூறு எதுவுமே இங்கு காட்டப்படவில்லை.

இந்த அரசாங்கக் காலத்தில் புதிய அரசமைப்பு நிச்சயம் வருமென்று நம்பிக்கை தெரிவித்த கூட்டமைப்புக்கு இது பெரும் கவலையைக் கொடுத்தது.


அதனால், ஒரு யோசனையை கூட்டமைப்புத் தரப்பு இங்கு மிக வினயமாக முன்வைத்தது. புதிய அரசியலமைப்பில் எது இல்லாவிட்டாலும், ஆகக்குறைந்தது அதிகாரப் பரவலாக்கலையாவது வழங்கலாமேயென்று சுமந்திரன் வேண்டியதாக தெரியவந்துள்ளது. புதிய அரசமைப்பில் எது இல்லாவிட்டாலும் பரவாயில்லை இதுவாவது இருந்தால் போதுமென்ற கோரிக்கைக்கு அமைச்சர்கள் மனோ கணேசனும் ராவுப் ஹக்கீமும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் போனால் போகட்டுமேன சுமந்திரன் உட்பட நால்வர் கொண்ட குழுவொன்று இதுபற்றி ஆராய்ந்த அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் கால இழுத்தடிப்பே தவிர வேறொன்றுமில்லை.

மொத்தத்தில் இங்கு இரண்டு விடயங்களைக் குறிப்பிட வேண்டும்.

ஜெனிவா காலஅவகாசத்தை கூட்டமைப்பு எதிர்க்கப்போவதில்லை. புதிய அரசியலமைப்பானது  கூட்டமைப்பு எதிர்பார்ப்பதுபோல அமையப்போவதில்லை.

இயக்க அரசியலில் நிமிர்ந்து நின்ற இனம், இணக்க அரசியலில் குனிந்து நிற்கிறது. 

No comments