சமந்தா பவர் உரையாற்ற எழுந்தபோது வெளியேறிச் சென்ற மைத்திரி

கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வில், ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் உரையாற்ற ஆரம்பிக்க முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரங்கில் இருந்து திடீரென எழுந்து  வெளியேறிச் சென்றார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர அரசியல் வாழ்வில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, கொழும்பு பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் கலந்து கொண்டார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள், முக்கிய இராஜதந்திரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இதில் சமந்தா பவர் உரையாற்ற தொடங்க முன்னதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரென எழுந்து வெளியே சென்று விட்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சமந்தா பவர் கடந்த அண்டு ஒக்ரோபர் மாதம் சிறிலங்காவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் போது, ஜனநாயக அமைப்புகள் உறுதியாக செயற்பட்டதைப் பாராட்டியிருந்தார்.  அரசியல் குழப்பங்களின் சூத்திரதாரியான, மகிந்த ராஜபக்ச அப்போது முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.

சிறிலங்கா அரசியல் குழப்பங்கள்  ஏற்பட்ட போது, சமந்தா பவர் தனது கீச்சகப் பக்கத்தில் சிறிலங்கா அதிபர் சிறிசேன, மற்றும் மகிந்த ராஜபக்சவை விமர்சித்து. காட்டமான கருத்துக்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments