Header Shelvazug

http://shelvazug.com/

பெரும்பான்மை மதத்தினரை நோக்கி நகரும் திராவிட அரசியல் !

தமிழக அரசியல் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய மாற்றங்களை நோக்கி தற்போது நகர்ந்து கொண்டிருக்கிறது. 
நீதிக்கட்சி அதன் பிறகு திமுக, திமுகவைத் தொடர்ந்து அண்ணா திமுக, என திராவிடம் என்ற சொல்லைத் தாங்கி வந்த கட்சிகளே தமிழகத்தில் அதிகம்.
காரணம், பிராமணர்கள் ஆதிக்கம் மிகுந்திருந்த இந்திய மற்றும் தமிழக அரசியல் களத்தில் பிராமணர்கள் அல்லாதவர்களும் பிரதிநிதித்துவம் பெறவேண்டும், ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும், கல்வி வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெறவேண்டும் என்கிற முழக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன திராவிட இயக்கங்கள்.
 பெரியாரின் திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளான பிராமண எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு,சமூக நீதி  ஆகியவற்றை ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகும் திமுக  உறுதியாகவே பின்பற்றி வந்தது. திமுக தலைவர் கருணாநிதி இறுதி நாள் வரை இக்கொள்கையில் சமரசம் செய்யவேயில்லை. பொதுச்செயலாளர் அன்பழகன் இன்றும் இக்கொள்கையில் உறுதியாக உள்ளார். 

சைவ, வைணவ, சக்தி வழிபாடு உள்ளிட்ட பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதக் கோட்பாடுகளைத் தான் பின்பற்றாவிட்டாலும் கருணாநிதியின் ஆட்சியில்தான் அறநிலையத்துறை உருவாக்கப்பட்டு கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினரை அரவணைத்து தனித்துவமான அரசியலை அவர் முன்னெடுத்தார்.
திமுகவில் இருந்து பிரிந்த எம்ஜிஆர், பெரியார், அண்ணா மற்றும் பொதுவுடமைச் சித்தாந்தங்கள் ஆகியவற்றைக் கலந்த ஒரு கலவையாக அண்ணா திமுகவைத் தொடங்கினார். 
அண்ணாவின் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அனைவரும் ஒரே குலம், தெய்வம் ஒன்றே என்ற முழக்கத்தை எம்ஜிஆர்  கைகளில் எடுத்தார்.
கடவுளை மற மனிதனை நினை, கடவுள் இல்லவே இல்லை என்ற திராவிடர் கழகத்தின், பெரியாரியத்தின் கொள்கை நிலைப்பாட்டைத் தாண்டி அண்ணா முன்னெடுத்த ஒன்றே குலம், ஒருவனே தேவன் திராவிட அரசியல் வரலாற்றின் மிக முக்கியமான திருப்பு முனையாக இருந்தது.
இந்த முழக்கத்தை எம்ஜிஆர் தன் திரைப்படங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சென்றதுடன் அவரது திரைப்படங்களில் முருகன் உள்பட கடவுளர்கள் காண்பிக்கப்பட்டனர். மூகாம்பிகை கோயிலுக்கு தங்க வாள் கொடுப்பது போன்ற அவரது நேரடிச் செய்கைகள்  சைவ, வைணவ, முருகன், சக்தி வழிபாடு ஆகிய பெரும்பான்மை மக்களின் வழிபாட்டு முறைகளை ஆதரிப்பதுடன், கிறித்துவ, இஸ்லாமியர்களையும் ஒன்றே குலம் என்கிற அடிப்படையில் அரவணைத்து பெரும்பான்மை மக்களையும் சிறுபான்மை மக்களையும் ஒன்றிணத்த புதிய கோணத்தில் அரசியலை முன்னெடுத்தார். இதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. 

அதே சமயம், திமுக தன் கொள்கைகளில் மாற்றமில்லாமல் சென்றது அதன் கொள்கைப்பிடிப்புக்கான வெற்றி என்றாலும்கூட அரசியல் ரீதியாக பின்னடைவையே சந்தித்தது.
அதிமுக தவறு செய்கின்றபோதும், அதிமுகவின் மீது அதிருப்தி ஏற்படும்போது மட்டுமே திமுக மாற்றாக ஆட்சிக்கட்டிலில் அமரவைக்கப்பட்டதே அதிக முறை நடைபெற்ற நிகழ்வாக இருந்திருக்கின்றன.
அதேசமயம், கருணாநிதியைப் பொறுத்தவரை அவரது கவியரங்கங்களில் வாலி நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு முருகன் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பான் என்று அவர் வாழ்த்தியபோதும்கூட அதனையும் ஏற்கும் தன்மையுடனே அவர் இருந்தார். சாயிபாபா தன்வீட்டிற்கு வந்தபோதும் அவரை வரவேற்றார்.
அதாவது தான் கடவுள் மறுப்பாளன் அதே சமயம் பிறர் நம்பிக்கைகளைக் குறைகூறுவதில்லை என்று மக்களிடம் ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கவேண்டிய நிலையில் சில நேரங்களில் அவரது சிறு சிறு விமர்சனங்கள்கூட பெரும்பான்மை மக்களுக்கு எதிரானதாகவே திருப்பி விடப்பட்டன.
திமுகவின் பகுத்தறிவுச் சித்தாந்தம் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதவழிபாட்டில் உள்ள  மூடநம்பிக்கைகளை, அடிப்படைவாதத்தை எதிர்ப்பது மட்டுமே தவிர மதத்தையோ, வழிபாட்டு முறைகளையோ அல்ல என்கிற நிலையைவிட பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதம், கடவுள், வழிபாடு ஆகிய அனைத்துக்குமே திமுக எதிரி என்பதுதான் மக்கள் மனதில் பதிந்து போன ஒரு பிம்பம்.
திமுக தலைவர் கொள்கைப்பிடிப்போடு இருந்தாலும் குடும்பத்தினர், தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள் அப்படி இல்லை என்கிற விமர்சனங்களும் வலுவாகவே வலம் வர இது திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்கிற ஒரு எதிர்மறை பிம்பமும் உருவானதைத் தவிர்க்க இயலவில்லை.
பெரும்பான்மை மக்கள் வழிபாட்டு முறைகளை இந்துத்துவம் என்கிற பெயரில் தனதாக்கி நாடு முழுவதும் இந்தப் பெயரிலேயே அரசியல் மேற்கொண்ட ஆரியம் திமுகவின் இந்த தன்மையை அதற்கெதிரான வலுவான பரப்புரையாகவே மேற்கொண்டது.
ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் திமுகவின் பல உறுப்பினர்கள் அவர்களின் குடும்பத்தினர் கோயில்களுக்குச் செல்வது, வழிபாடு நடத்துவது, நெற்றியில் சமயச் சின்னங்கள் அணிவது என இயல்பாகவே அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டனர்.
அடிக்கடி சமூக ஊடகங்களில் கூட பகுத்தறிவு மற்றும் கடவுள் நம்பிக்கை தொடர்பான விவாதங்கள், விமர்சனங்கள் கடுமையாகவே பரிமாறிக்கொள்ளப்பட்டன. 
கருணாநிதிக்குப் பிறகான அரசியல் தலைமை ஏற்கவேண்டிய நிலையில், வரிசையில் இருந்த மு.க.ஸ்டாலினுக்கு இது மிகப்பெரிய அதே வேளை மிகக் கவனமாகக் கையாளவேண்டிய ஒன்றாகவே இருந்தது.
மேலும், இந்துத்துவ கோட்பாடோடு உள்ள பாரதிய ஜனதா  ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவைத் தன்வயமாக்கிக்கொண்டாலும், திமுகவை பலமிழக்கச் செய்ய தேவை அரசியல் ரீதியாக அதற்கு இருக்கிறது. அதற்கு முக்கிய ஆயுதமாக திமுகவின் பெரும்பான்மை எதிர்ப்புக் கொள்கையையே கைகளில் எடுத்தது.
திமுக பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கட்சி, அவர்களின் நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தும் கட்சி அதேசமயம் சிறுபான்மை மக்களை அரவணைக்கும் கட்சி,அந்தச் சிறுபான்மை மக்களும் வெளிநாட்டு மதவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்கிற பரப்புரை திமுகவுக்கு எதிராக வலிமையாகவே முன்வைக்கப்படுகின்றன.
இத்தகைய சூழலில்தான் திமுகவின் மதம் சார்ந்த பார்வையில் அரசியல் நிலைப்பாட்டில் பல மாற்றங்களைக் காண முடிகிறது. வீட்டில் நடக்கும் வழிபாடுகள் தொடர்பான புகைப்படங்கள், வெளியே கோயில்கள் அதிகம் உள்ள இடங்களில் மு.க.ஸ்டாலின் செல்வது, பிராமணரிடம் சென்று கைகுலுக்கி வாக்குகள் கேட்பது, நெற்றியில் திருநீறு, குங்குமம் யாராவது அளித்தால் மறுக்காமல் பெற்றுக் கொள்வது என பெரும்பான்மை மக்களுக்கு திமுக எதிரி அல்ல என்ற தோற்றத்தை உருவாக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது.
இதையெல்லாம்விட ஒரு படி மேலே சென்று சிறுபான்மை வேட்பாளர் எவரையும் களம் இறக்காமல் தவிர்த்தது ஆகியவையும் கூர்ந்து கவனிக்கப்படும் மாற்றங்களாக உள்ளன.
அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா இருந்த காலத்தில் அவரது கொள்கைகள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை விட ஒன்றே கட்சி, ஒருவரே தலைவி என்கிற கொள்கையே வலுவாக இருந்தது. ஒரு கோடிப் பேர் உள்ள கட்சி என்று கூறப்பட்டாலும் ஒரே ஒரு குரல் மட்டுமே ஒலிக்கும், ஒரே ஒரு பெயர் மட்டுமே உச்சரிக்கப்படும், அது ஜெயலலிதா. 
கடுமையான நிர்வாகம், இறுக்கமான நிலை, இரண்டாம் கட்டத்தலைவர்கள் எவரும் அவரை எளிதில் அணுக முடியாது. அவர் கட்சி அலுவலகத்திற்கு வருவதே திருவிழாக் கொண்டாட்டம் போல, சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம், கட்அவுட்டுகள், செண்டை மேளங்கள் என ஆர்ப்பாட்டம். எப்போது என்ன நடக்குமோ என்ற ஒருவித பதற்றத்திலேயே மக்கள் இருந்த நிலை, எதிர்ப்பவர்கள், விமர்சிப்பவர்கள் கடுமையான அடக்குமுறைக்கு, வழக்குகளுக்கு ஆளான நிலை, எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாகவே பார்த்த நிலை என கடுமையான ஒரு நிலையே இருந்தது.

ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவை சசிகலா கைகளில் எடுக்கவிருந்த நிலையில் அந்தப் பதற்றம் மக்களிடையே கடுமையாக எகிறவே ஆரம்பித்தது.
ஆனால், எவரும் எதிர்பாராத வண்ணம் எடப்பாடி தலைமையிலான ஆட்சி அதிகாரம், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான கட்சி நிர்வாகம் என அதிமுகவையும், கட்சியையும் ஒரு சேர வழிநடத்திய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஜெயலலிதா இருந்தபோது இருந்த அத்தனை இறுக்கங்களையும் தளர்த்தியது.
பொதுப்பணித்துறை உள்பட அத்தனை ஒப்பந்தங்களும் செயல்படுத்தப்பட்டன. கட்சிக்காரர்களுக்கு ஒப்பந்தப்பணிகள், உதவிகள் செய்யப்பட்டன. பொதுப்பணித்துறை, சாலை, உள்ளாட்சி என அனைத்துத் துறைகளிலும் என்னென்ன பணிகள் உள்ளனவோ அத்தனையும் செயல்படுத்தப்பட்டு பணப்பட்டுவாடாக்கள் செய்யப்படுகின்றன. சாலை வசதிகள், குடிநீர், மின்சாரம், கல்வி, சுகாதாரம் என அனைத்துத்துறைகளிலும் பணிகள் நடைபெற்று தொடர்புடைய கட்சி சார்புடைய ஒப்பந்ததாரர்கள் இதனால் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றனர். இந்தவகையில் கட்சிக்காரர்களைத் தங்கள் வசம் வைத்துக் கொள்கின்றனர் எடப்பாடி நிர்வாகத்தினர். தொடக்கத்தில் மக்களிடம் எதிர்ப்பும் ஏளனமும் இருந்தாலும்கூட தற்போது அந்த எதிர்ப்பு மன நிலை மாறி இருப்பதைக் காண முடிகிறது. பாஜக அரசின் கட்டுப்பாட்டில் அதிமுக அரசு இருப்பதாகக் கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும்கூட அதையெல்லாம் பொருட்படுத்தாது அரசை ஐந்தாண்டுகள் நடத்துவதோடு அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு செயல்படுகிறது இந்த அணி.
இந்துத்துவத்தை முன்னிறுத்தும் பாஜக அதிமுகவுடன் கூட்டணி என்பது வியப்பூட்டக்கூடியது அல்ல, காரணம் அதிமுக கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட கட்சியோ, பெரும்பான்மை மக்களிடம் எதிர்ப்பைப்பெற்ற கட்சியோ அல்ல. 
ஆனால், பாரதிய ஜனதா ஏற்படுத்திய இந்துத்துவ அழுத்தமும், தாக்கமும் கட்சிகளின் நிலைப்பாட்டில் பெரும் மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றன.
பிராமணர்கள் 3 சதம் மட்டுமே இருந்தாலும்கூட அவர்கள் பெரும்பான்மை மக்களின் மத்தியில் பிற சாதிக் குழுவினரிடம் ஏற்படுத்துகின்ற இந்துத்துவத் தாக்கம் பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.
இவை ஒருபுறம் இருக்க பட்டியலினத்தவர்களின் தலித் அரசியலும் தேசிய அளவில் புதிய வடிவத்தை எட்டியிருக்கின்றன. குறிப்பாகத் தமிழகத்தில் தற்போது வெளிப்படையான விவாதங்கள் அதிகரித்திருக்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பில் மட்டுமல்ல சமூக, அரசியல் தளத்திலும் பிரதிநிதித்துவம் தேவை என்பதும் ஆனால் அவை தொடர்ந்து தரப்படாமல் தனிமைப்படுத்தும் அல்லது சிறுமைப் படுத்தும் செயலே நடப்பதால் தவறு யார் மீது என்கிற கேள்விகள் அடங்கிய சிந்தனை விவாதங்களை நோக்கித் திரும்பியிருக்கின்றன. தலித் அரசியல் கட்சியினரும் மாற்றி சிந்திக்க, செயல்படவேண்டிய நிலையில் தற்போது உள்ளனர்.
இல்லையெனில் அவர்களின் எதிர்கால அரசியலும் கடந்த காலங்களைப்போலவே இருக்க நேரிடலாம். தலித் வேட்பாளர்களுக்கு அனைத்துக் கட்சிகளிலும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டபோதும் தனித்த, ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கிற நிலைக்கு அவர்களின் வாக்குகள் ஒன்றுபட்டதாக இன்னமும் மாறவில்லை.
டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்கள் இன்னமும் சரியான முடிவை எடுக்க இயலாதது தவிப்பதைத், தங்களுக்குக் கிடைத்த சிறு சிறு வெற்றியைக்கூட பெரும் வெற்றியாகப் பாவித்துக் கொள்வதைக் கண்கூடாகக்காண முடிகிறது. திமுகவின் பெரும்பான்மை மக்களை நோக்கிய நிலைப்பாட்டின் அடிப்படையில் கூட்டணிக் கட்சிகளும் செல்லவேண்டிய நிலை உருவாகியுள்ளது, குறிப்பாக உயர்த்தப்பட்ட சாதியினரையும் தங்களுக்கு ஆதரவளிக்கச் செய்ய பெரும்பான்மை மக்களுக்குத் தாங்களும் எதிரி அல்ல என்பதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
 டி.டி.வி தினகரன், திராவிட என்ற சொல்லைத் தவிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியது மற்றுமொரு மாற்றம். அவரும் வெளிப்படையாகவே பக்தி, வழிபாடு ஆகியவற்றைக் கொண்டிருப்பதும் பெரும்பான்மை மக்களால் கவனிக்கப்படுகிறது.
இந்துத்துவம்,  தலித் அரசியல் ஆகியவை இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும், சந்தித்திருக்கும் அதே நேர தமிழ்த் தேசியம் மிக வேகமான மாற்றங்களை இங்கே உருவாக்கியிருக்கிறது. நாம் தமிழரின் தமிழ்த்தேசியம் திராவிடக் கட்சியினரால் கடுமையாக விமர்சனம், கேலி செய்யப்பட்டபோதிலும், அதன் வளர்ச்சியும், பரவலும், மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ள ஆழமும், தமிழ், தமிழர் நலன்களை முன்னிறுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டு கட்சிகளையும் உள்ளாக்கியிருக்கிறது, அவ்வளவு ஏன் பாரதிய ஜனதாக் கட்சிக்குக்கூட தமிழ் மீது அளவு கடந்த பாசம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
ஆரியம் Vs திராவிடம் என்ற அரசியல், காமராஜர் Vs அண்ணா என்றாகி அதன்பின் கருணாநி Vs எம்ஜிஆர் ஆகி பின் கருணாநிதி Vs ஜெயலலிதா என்கிற அரசியலாக மாற்றம் பெற்ற போதே தமிழ்நாட்டில் கொள்கை அரசியல் என்பது அற்றுப்போய் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியலாக மாறிவிட்ட நிலையில், பணபலமே அரசியலின் மிக முக்கியமான கருவியாக ஆகிவிட்டநிலையில் இனி எந்தக் கொள்கை மக்களின் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போகிறது என்பதை அறிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.
அதேவேளை  ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தேர்தலைச் சந்திக்கும் தமிழகக் கட்சிகளில் ஏழு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்திராத திமுகவுக்கும், ஜெயலலிதா இல்லாத எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கும், டிடிவி தினகரனுக்கும் வரும் தேர்தல்கள் வென்றாக வேண்டிய தேர்தல்கள். அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் தேர்தல்கள் என்பது மட்டும் எதார்த்தமான உண்மை. 
- தமிழகத்திலிருந்து விஷ்வா விஸ்வநாத்-


No comments