கலப்பு நீதிமன்றையும் ஏற்கோம் - இலங்கை விடாப்பிடி

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை ஏற்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின், கிளை அலுவலகமொன்றை இலங்கையில் திறக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனையையும் அவர் நிராகரித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடரில் இன்று (20) ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின், இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அம்மையார் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

கலப்பு நீதிமன்றப் பொறிமுறை உட்பட சில பரிந்துரைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

குறித்த அறிக்கைக்கு இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பதிலளித்து உரையாற்றினார்.

“ஐ.நா.மனித உரிமைகள் சபையால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டுப் பணியகம் நிறுவப்பட்டுள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமைச்சரவையில் அது குறித்து பரிசீலிக்கப்படுகின்றது.

அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளைத் துரிதமாக விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக சர்வதேச தரத்திலான சட்டத்தை அமுல்படுத்த பொறிமுறை வகுக்கப்பட்டு வருகின்றது.

சர்வதேச நீதிபதிகளை ஏற்க இலங்கை அரசமைப்பில் இடமில்லை. ஐ.நாவின் கோரிக்கையை ஏற்பதாயின் அரசமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். அது மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன், சர்வஜன வாக்கெடுப்புக்கும் விடப்பட வேண்டும்” – என்றார் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன

No comments