கிடைத்த வாய்ப்புக்கள் எல்லாவற்றையும் கூட்டமைப்பு தவறவிட்டுவிட்டது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் வீணடித்துவருவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பினை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு எதனையாவது பெற்றுக்கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் இன்று பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இந்தியாவினை காட்டி அரசியல் செய்தவர்கள் இன்று ஜெனிவாவினை காட்டி அரசியல் செய்துவருகின்றது.

1978ஆம் ஆண்டு தொடங்கி 2009ஆம் ஆண்டுவரை இந்திய அரசின் பக்கம் மக்களை திசை திருப்பி இந்திய அரசாங்கம் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுத்தரும் என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.

2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஐ.நா எங்களை காப்பாற்றும், ஐ.நாவிற்கு வாக்களியுங்கள் என்று இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் ஐ.நாவில் சென்று பேசுவதும் இலங்கை அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்குவதும் யார் என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.

2015ஆம் ஆண்டில் போர்க்குற்றங்களுக்கான நியாயத்தை பெற்றுக்கொடுப்போம், தமிழர்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்போம், வடக்கு, கிழக்கை இணைப்போம், சமஷ்டியை பெற்றுத் தருவோம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி மக்களிடம் வாக்ககளை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆட்சியை தீர்மானிக்கின்ற நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது.
அதையும் கூட்டமைப்பு தவறவிட்டுவிட்டது என்றார்.

No comments