ஐ.நாவின் பிடிக்கு அரசியல் சூழ்ச்சியே காரணம்

“இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் பாரதூரமான அறிக்கை. இதை இலங்கையில் ஆட்சியில் உள்ள எவரும் உதாசீனம் செய்யக்கூடாது. 2018 ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியே இலங்கை மீதான ஐ.நாவின் இறுக்கமான பிடிக்குக் காரணமாகும்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியதாவது:-

“மைத்திரி – மஹிந்த கூட்டணியின் அரசியல் சூழ்ச்சியால் இலங்கை பெரும் விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிவரும் என நான் ஏற்கனவே எச்சரித்தேன். அதன் ஒரு பிரதிபலிப்பே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் காட்டமான அறிக்கையாகும்.

இலங்கையில் அரசியல் சூழ்ச்சியை முடிவுக்கொண்டுவர அயராது பாடுபட்ட வெளிநாடுகள் இன்று ஜெனிவாவில் இலங்கையை தங்கள் பிடிக்குள் வைத்துள்ளன.

நாட்டின் ஜனாதிபதியும் அரசும் ஐ.நாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் வழங்கிய பல வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அந்த வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அதுதான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா. தீர்மானத்தை வெறும் போர்க்குற்ற தீர்மானம் என்று ஜனாதிபதி மைத்திரிபால நினைக்கின்றார் போல் இருக்கின்றது. முதலில் அதில் உள்ள நாட்டின் எதிர்காலம் நலன் சார்ந்த பரிந்துரைகளை ஜனாதிபதி பொறுமையுடன் இருந்து வாசிக்க வேண்டும். அதனை உடன் செயற்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதேவேளை, இலங்கை தொடர்பில் ஐ.நாவில் நிறைவேற்றப்படவுள்ள புதிய தீர்மானத்தின் பரிந்துரைகளை உடன் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் ஆட்சியிலுள்ள அனைவரும் எடுக்கவேண்டும்” – என்றார்.

No comments