ரணிலையும் நம்பத் தயாரில்லையாம் - சம்பந்தன் புதுக்கதை

“தமிழ் மக்கள் தாம் எப்போதும் ஏமாற்றப்படுவதாகவே உணர்கின்றார்கள். அவர்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை. அவர்களுக்குச் சரியானதைச் செய்வது தொடர்பில் சிங்களத் தலைவர்கள் பின்வாங்குகிறார்கள். இது தொடர்பில் சர்வதேசம் சமூகம் கூடிய கரிசனை கொள்ள வேண்டும். அதேவேளை, இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சர்வதேச அழுத்தம் மேலும் தேவை.”

– இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் முன்னாள் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் இன்று (18) சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெற்ற சம்பவங்களின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவரும் செயற்பட்ட விதம் குறித்து தனது பாராட்டுக்களை ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன்,

“தமிழ் மக்கள் எப்போதும் அரசமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தவர்கள். குறுகிய அரசியல் இலாபங்களுக்காகச் செயற்படாமல் கொள்கைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றியவர்கள்.

மேலும் அரசியலமைப்பு சபையானது உயர் பதவிகளுக்கு நபர்களை நியமிக்கின்ற போது மிகவும் அவதானத்துடன் செய்யப்பட்டமையானது அரசமைப்புக்கு முரணான சம்பவங்களை இந்த நாட்டின் உயர்நீதிமன்றங்கள் அனுமதிக்காமைக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது” என்றார்.

ஐ.நா. தீர்மானம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன்,

“காணாமல்போனோருக்கான அலுவலகம், நட்டஈடு அலுவலகம் மற்றும் உண்மை நல்லிணக்க அலுவலகம் போன்றவை மக்கள் மத்தியில் செயற்படுவது அவசியம். அத்தகைய அலுவலகங்கள் உண்மையை நிலைநாட்டும் முகமாகத் தொடர்ச்சியாக மக்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைப்பது மாத்திரமல்லாது அரசும் ஏனைய மக்களும் தங்கள் நிலைமை குறித்து கரிசனையாக உள்ளார்கள் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளும் முகமாக அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

அரசும் சில அரசியல்வாதிகளும் இதனை தமிழ் – சிங்கள பிரச்சினையாக உருவாக்க முயற்சிக்கின்றனர். இது அத்தகைய பிரச்சினை அல்ல. மாறாக இது அடிப்படை மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்” என்று சுட்டிக்காட்டினார்.

புதிய அரசமைப்பு

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜெப்ரி பெல்ட்மனிடம் தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன்,

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்குப் பிற்பாடு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விடயம் தொடர்பில் அநேக கருமங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், அரசியல் விருப்பும் உத்வேகமும் இல்லாமையும் அரசியல் ரீதியாக இருக்கின்ற செல்வாக்கை இழந்துவிடுவோம் என்ற பயமும் அரசியல்வாதிகள் மத்தியில் காணப்படுகின்றன.தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளைத் தீர்ப்பது தலைவர்களின் கடமையாகும். அரசியல் விருப்பம் இல்லாமையானது சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த நாடு முன்னேற்றகரமான பாதையில் செல்வதற்குத் தடையாக உள்ளது.

அரசியல் தீர்வும்
வாக்குறுதியும்

தமிழ் மக்கள் தாம் எப்போதும் ஏமாற்றப்படுவதாகவே உணர்கின்றார்கள். அவர்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை. அவர்களுக்குச் சரியானதைச் செய்வது தொடர்பில் சிங்களத் தலைவர்கள் பின்வாங்குகிறார்கள். இது தொடர்பில் சர்வதேசம் சமூகம் கூடிய கரிசனை கொள்ள வேண்டும்.

மேலும் பிரிக்க முடியாத – பிரிபடாத ஒருமித்த நாட்டுக்குள் நியாயமான ஓர் அரசியல் தீர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

தமிழ் மக்கள் தமது சொந்த வரலாற்றையும் பாரம்பரியங்களையும் கொண்ட தனித்துவமான மக்கள். எமது அடிப்படை உரிமைகளையே நாங்கள் கேட்கின்றோம். இன்று இந்த நாட்டில் எமது விருப்பத்துக்கு மாறாக நாம் ஆளப்படுகின்றோம்.

இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சர்வதேச அழுத்தம் மேலும் தேவை. எனவே, இலங்கை அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக இலங்கை தொடர்பான பிரச்சினையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்லுங்கள்” என்று ஐ.நாவின் முன்னாள் அரசியல்துறை செயலாளர் நாயகத்திடம் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

No comments