மனித உரிமைகள் ஆணையர் அறிக்கையை நிராகரித்தது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்ள எல்லா விடயங்களையும், சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

“ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம், பதிலளிக்கும். குறிப்பாக, அந்த அறிக்கையில், வடக்கில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதனை அரசாங்கம் நிராகரிக்கிறது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகளில் 90 வீதமானவை மீளக் கையளிக்கப்பட்டுள்ளன என்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் எடுத்துரைக்கும்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையையும், சிறிலங்கா இணை அனுசரணை வழங்கும் தீர்மானத்தையும் ஒன்றாக போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.

போருக்குப் பிந்திய நல்லிணக்கம், மீள்குடியேற்றம்  போன்றவற்றுக்கு மேலதிக காலஅவகாசத்தைக் கோரும் வகையில் மாத்திரமே, தீர்மானம் அமைந்திருக்கிறது.

கூட்டுத் தீர்மானத்தின் மூலம், சிறிலங்காவின் அனைத்துலக நற்பெயரை மீளப் பெற முடிந்துள்ளது. சிறிலங்காவினால், தமது விவகாரங்களைக் கையாள முடியும் என்று அனைத்துலக சமூகத்துக்கு காண்பிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments