சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கமாட்டோம் - இலங்கை திட்டவட்டம்

“போரின்போது குற்றங்கள் இழைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இலங்கையால் இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானத்தில் திருத்தம் செய்வது குறித்து சர்வதேச சமூகத்துடன் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது.”


-இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியல்ல இன்று (08) தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று (08) முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான  கேள்விநேரத்தின்போது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான  தயாசிறி ஜயசேகர எம்.பி.,

” ஐ.நா.  மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு 2015 ஆம் ஆண்டு அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவால் இணை அனுசரணை வழங்கப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கிரியல்ல,

”  2015 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் சர்வதேச சமூகத்துடனான உறவு சுமூகமான முறையில் தொடர்கின்றது. இன்று உள்நாட்டு நீதிமன்ற கட்டமைப்பு  குறித்து கதைப்பவர்கள்தான் அன்று பிரதமர் நீதியரசரை 24 மணி நேரத்துக்குள் பலவந்தமாக வீட்டுக்கு அனுப்பினர்.

இராணுவத்தினர்மீது அதிக பற்றை வெளிப்படுத்துபவர்கள் அன்று இராணுவத்தளபதியாக இருந்த சரத்பொன்சேக்காவை இழுத்துச்சென்று – சிறையில் அடைத்தனர்.

சர்வதேச நீதிபதிகளை  ஏற்பதற்கு  நாம் உடன்படவில்லை. உள்ளக விசாரணைக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை பெறுவதற்கு மாத்திரமே உடன்பட்டோம்.

அத்துடன்,  ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, இலங்கைக்கு சாதகமாக்கி கொள்வதற்காக அதில் திருத்தங்களை செய்வது குறித்து சர்வதேச சமூகத்துடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது.” என்று கூறினார்.

No comments