காங்கேசன்துறையில் 227 ஏக்கர் தனியார் காணிகளை கையகப்படுத்துகிறது கடற்படை


காங்கேசன்துறையில் பொதுமக்களுக்குச் சொந்தமான 227 ஏக்கர் தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்கு அரசு மிக இரகசிய முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்தக் காணி சுவீகரிப்புக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாகத் தெரியவருகின்றது.
காங்கேசன்துறைப் பகுதியில், காங்கேசன்துறை மத்தி மற்றும் நகுலேஸ்வரம் ஆகிய கிராம சேவகர் பிரிவில் உள்ள 227 ஏக்கர் காணிகளே சுவீகரிக்கப்படவுள்ளன.
கடற்படை முகாமுக்கு 163 ஏக்கர் காணியும், சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்காக சுற்றுலா அதிகார சபைக்கு 64 ஏக்கர் காணியும் சுவீகரிக்கப்படவுள்ளன.
சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்காகச் சுவீகரிக்கப்படும் காணியிலேயே காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையும் உள்ளடங்குகிறது.
சுவீகரிக்கப்படவுள்ள காணிகளில் பெரும்பாலானவை தனியாருக்குச் சொந்தமானவை.
இரகசியாமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தக் காணி சுவீகரிப்பு முயற்சி, காணிசமான படிமுறையைக் கடந்து விட்டது எனக் கூறப்படுகின்றது.
அந்தப் பகுதியில் அளவை செய்வதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டு, தனியார் காணி உரிமையாளர்களுக்கும் தெல்லிப்பளைப் பிரதேச செயலகத்தில் இருந்து நேற்றுக் கடிதம் மூலம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காணி சுவீகரிப்பு படிமுறையின், ‘பிரிவு- 2’ பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.
கடற்படை மற்றும் சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்காகச் சுவீகரிப்படவுள்ள காணிகளில் பெரும்பாலானவைத் தனியாருக்கு சொந்தமானவை.
காங்கேசன்துறை துறைமுகத்தை அண்டிய இந்தப் பகுதி எதிர்காலத்தில் சுற்றுலாத் துறைக்கு மிக உகந்த பகுதியாகக் கணிக்கப்பட்ட பகுதியாகும்.
அத்துடன் தமிழர்களின் பாரம்பரிய, புராதன வழிபாட்டிடங்களையும் கொண்ட பகுதி இது. சுவீகரிக்கப்படும் பகுதிக்குள் சுமார் 7 வழிபாட்டிடங்கள் உள்ளடங்குகின்றன.
சுவீகரிக்கப்படும் காணியில், ஸ்ரீமத் நாராயண ஆலயத்துக்கு (கிருஷ்ணர் ஆலயம்) சொந்தமான 47 ஏக்கர் காணி, கதிரையாண்டவர் ஆலயத்தின் 25 ஏக்கர் காணி, சோலை வைரவர் மற்றும் சில ஆலயங்களின் 25 ஏக்கர் காணி, சடையம்மா சமாதி ஆலயத்தின் 20 ஏக்கர் காணி மற்றும் புராதன நல்ல தண்ணீர்க் கிணறு மற்றும் தனியார் காணிகள் இதில் உள்ளடங்குகின்றன.
அத்துடன், பழைய தெல்லிப்பழை வைத்தியசாலை காணியும் இதற்குள் உள்ளடங்குகிறது.
காணி சுவீகரிப்புப் படிமுறையில், ‘பிரிவு- 2’ படிமுறையென்பது, காணி உரிமையாளர்களுக்குத் தகவல் வழங்கி, அளவீட்டுக்கான படிமுறையாகும். காணியை அளவீடு செய்யும்படியான அறிவித்தல், நில அளவைத் திணைக்களத்துக்கும் வழங்கப்பட்டுவிட்டது. எந்தச் சமயத்திலும் காணி அளவீட்டுப் பணிகள் நடக்கலாமெனத் தெரிகிறது.
இதேவேளை, இந்த காணி சுவீகரிப்பு முடிவு வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்டதாவும், அந்தச் செயலணியின் அறிவித்தலின்படியே தாம் நடக்கின்றனர் எனவும் தொடர்புடைய அரச அதிகாரிகள் கூறினர்.

No comments