வீதியை மூடிய ஆர்னோல்ட் - 350 குடும்பங்கள் நிர்க்கதி நிலை

கொழும்புத்துறை 3 ஆம் குறுக்குத் தெருவில் பாடசாலை மாணவர்கள் கடற்றொழிலாளர்கள் என சுமார் 350 இற்கும் மேற்பட்ட குடும்பங்களால் பயன்படுத்தப்பட்டுவந்த வீதி ஒன்று தானியார் சிலரது கோரிக்கையினால் அரசியல் தலையீட்டின் காரணமாக யாழ் மாநகரசபையினால் மூடப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபையின் இத் தான்தோன்றித்தனமான செயற்பாட்டினால் தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அப் பகுதி மக்கள் தாம் தொழிலுக்கோ, மாணவர்கள் பாடசாலைக்கோ அரைக் கிலோ மீற்றரில் கடக்கவேண்டிய வீதியை ஒன்றரைக் கிலோ மீற்றர் தாண்டி சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.








குறித்த வீதியினை மூடும் உத்தரவு தொடர்பில் வீதிக்காக காணியினை வழங்கிய காணி உரிமையாளருக்கு எழுத்துமூலமான உத்தரவு ஒன்றினை அனுப்பியுள்ள யாழ் மாநகர ஆணையாளர் காணி உப பிரிவிடலை தாம் இரத்துச் செய்துள்ளதாகவும் காணியின் வடக்குப் பக்கத்தில் காணியின் வரைபடத்தில் காண்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கையை மூடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

யாழ் மாநகரசபையின் ஆணையாளரினால் வீதியை மூடும் குறித்த எழுத்து மூல உத்தரவு அனுப்பப்படுவதற்கு முன்பாக சிலரால் வீதியை மூடி கொங்கிறீற் தூண்கள் இடப்பட்டுள்ளது. எனினும் அதனை பொது மக்கள் அகற்றி வீதியை பயன்படுத்திய நிலையில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் வீதி அடைக்கப்பட்டதாகவும் அதன் பின்பே வீதியை மூடும் உத்தரவு அனுப்பப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்புத்துறையில் 2015 ஆம் ஆண்டு தனியார் காணி உரிமையாளர்கள் சிலரின் ஒப்புதலுடன் அவர்களினால் வீதி அமைக்க இடம் வழங்கியதன் அடிப்படையில் தொடர்பற்றிருந்த நிலையிலிருந்த இரு வீதிகள் காணி உப பிரிவிடல் ஊடாக காணி உரிமையாளர்களின் சம்மத்துடன் 2015 - 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் பாவனைக்காக நகர அபிவிருத்திசபையினால்  (கோவை இலக்கம் J/DC/PPC/JMC/422/2015) யாழ்ப்பணாம் மாநகரசபையின் அனுமதியுடன் (வரைபட இலக்கம் 2789/1) இணைக்கப்பட்டு ஒரு வீதியாக்கப்பட்டது.

குறித்த காணி உப பிரிவிடுகைக்கான அங்கீகாரத்தினை (கோவை இலக்கம் SD240/503/6/112/2015) பொ.வாகீசன் வழங்கியிருந்தா்.

அதன் பின்னர் உப பிரிவிடுகை செய்யப்பட்ட ஒழுங்கை வரை யாழ்ப்பாணம் மாநகரசபையினால் தாரிடப்பட்டு வீதியின் ஒரு பகுதி தார் வீதியாகவும் மற்றய பகுதி மணல் வீதியாகவும் பயன்படுத்தப்பட்டுவந்தது.

இந்நிலையில் குறித்த இணைக்கப்பட்ட இரு வீதிகளின் ஒரு வீதியின் எதிர்த்திசையில் வசிப்பவர்கள் எனக் கூறப்படும் ஒரு சிலரினால் இரு மாதங்களுக்கு முன் குறித்த வீதிக்கு குறுக்காக கொங்கிறீற் தூண்கள் இடப்பட்டு வீதி மூடப்பட்டது. எனினும் அப்பகுதி மக்கள் அதனை அகற்றிவிட்டு வீதியைப் பயன்படுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் மாநகரசபையிலும் முறையிட்டுள்ளனர். எனினும் முன்னர் தம்மால் அனுதி வழங்கிய ஆவணங்கள் தொலைந்துவிட்டன என யாழ் மாநகரசபையினால் பொதுமக்களுக்கு பதிலளிக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ச்சியாக மேலும் இரு தடவைகள் குறித்த நபர்களினால் வீதி மூடப்பட்ட நிலையில் பொது மக்களால் அகற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து வீதியை மூடும் குறித்த நபர்கள் யாழ் மாநகர முதல்வரைச் சந்தித்திருந்த நிலையில் யாழ் மாநகர ஆணையாளரினால் 19.03.2019 அன்று திகதியிடப்பட்டு 2789/1 இலக்க நில அளவை வரைபடத்திற்கு வழங்கப்பட்ட காண உப பிரிவிடல் அனுமதியை இரத்துச் செய்வதாகவும் அவ்வரைபடத்தின் வடக்குப் பக்கத்தில் காண்பிக்கப்பட்ட ஒழுங்கையானது மூடப்பட வேண்டும் எனவும் காணியின் உரிமையாளருக்கு கடிதம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்த அப்பகுதி மக்கள் குறித்த விடையத்தில் யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் குறித்த காணிகளோடு தொடர்பு அற்றவர்களின் நலனின் அடிப்படையில் செயற்படுவதாகவும் குறித்த வீதிப் பிரச்சனை தொடர்பில் தாம் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments