இலங்கை வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்படலாம்?


ரணில் விக்கிரமசிங்கவின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவத் திட்டத்தை தோற்கடிப்பதற்கான சதிகள் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ரணிலின் வரவு செலவுத்திட்டத்தை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ளவில்லையென சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இதனால் மகிந்த ராஜபக்ச தரப்பு வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கும்போது சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிக்கலாமென மைத்திரிபால சிறிசேன தனக்கு நெருக்கமான மூத்த உறுப்பினர்களிடம் கூறியள்ளார். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றவுள்ளதாக மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர், முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

நடப்பு ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் பற்றாக்குறை கூடுதலாகவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவித் திட்டங்களும் உரிய முறையில் கிடைக்கவில்லை. அந்த நிதி மீண்டும் கிடைக்கும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர முன்னர் கூறியிருந்தார். ஆனால் சர்வதேச நாயண நிதியத்தின் நிதியுதவி கிடைத்தமை பற்றிய எந்தவொரு தகவலும் வரவு செலவுத் திட்டத்தில் இல்லை என்றும் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.

அதேவேளை, நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கனவு மாளிகை என ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது.

மறுபுறம் மைத்திரி கூட்டு சேர்ந்து வரவு செலவுத்திட்டத்தை தோற்கடித்தால் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க ரணில் தரப்பும் திட்டம் தீட்டியுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே இம்முறையும் கூட்டமைப்பின் வாக்கினை நம்பியே கொழும்பு வரவு செலவுத்திட்டம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments