சர்வதேசத்தில் தேடப்படும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் - ஜக்கி வாசுதேவ்குற்றவாளியின் அழைப்பையேற்று குடியரசுத் தலைவர் வருவதா?   கோவை ஈஷா யோகா மய்யத்தில், சிவராத்திரி நிகழ்ச்சியில், இந்தியக் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டதே முதலில் தவறான ஒன்று. மதச்சார்பற்ற நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட மத நிகழ்ச்சியில் பங்கேற்றது சரியானதல்ல.

அது ஒருபுறம் இருக்கட்டும். ஈஷா மய்யத்தினை நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் என்பவர் எத்தகையவர்?

இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் ஒரு சமுக விரோதியுடன் சேர்ந்து போதைப்பொருள் விற்பனை செய்ததாக வழக்கு நிலுவையில் இருந்தது, பிறகு அந்த சமுக விரோதி கொலை செய்யப்பட்டார். இதே போல் இவரது மனைவியின் சந்தேக மரணம் தொடர்பான வழக்கும் இன்றளவும் நிலுவையில் உள்ளது. இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

கோவையில் 13.12.2011 அன்று தன்மீதுள்ள குற்றச் சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க ஊடகவியலாளர்கள் சந்திப்பை இவரே ஏற்பாடு செய்தார். அதில் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். அந்தச் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளின் விவரம்

1. உங்கள் யோகா மய்யத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது, உண்மையா?

2.  யோகா மய்யத்திற்குள்ளும், உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களிலும், வெளிப்புற மரங் களிலும் இரகசிய கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப் படுவதாகவும் கூறப்படுகிறதே, உண்மையா?

3. உங்கள் பெயர் ஜாவா வாசுதேவ் என்பதை  எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்? இதுவும் உண்மையா?

4. 1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாகக் கூறப்படுவது உண்மையா? என்று கேள்விகள் கேட்டனர். அதற்கு பதில் அளிக்காது மவுனமாக இருந்த போது மீண்டும் ஊடகவியலாளர்கள் அதே கேள்விகளைக் கேட்க - அவரது ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் ஊடகவியலாளர்களைத் தாக்கினார்கள். இந்த தாக்குதல் தொடர்பாக  தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.12.2011) அன்று காலை சுமார்100க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் ஈஷா மய்யம் ஜக்கிவாசுதேவ் மீது புகார் கொடுத்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு "சம்பந்தப்பட்ட வர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார். இதன் அடிப்படையில் ஈஷா யோகா மய்யம் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல்நிலைய ஆய்வாளர் நகல் பிரதியை வழங்கினார். புகாரின் பதிவு எண்.433/1808. என்ன ஆயிற்று என்பதே தெரியவில்லை.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் பொருளாதார ஆய்வறிக்கையின் 32ஆம் பக்கம் என்ன சொல்லுகிறது? "யானைக் காப்பகங்களில் நகர மயமாக்கல்" என்ற தலைப்பில் ஜக்கி வாசுதேவின் நில அபகரிப்புப் பற்றி, விதி மீறல்கள் பற்றி விரிவாகக் கூறப்படவில்லையா?

யானைகளின் வழித்தடங்களில் யோகா பயிற்சி மய்யக் கட்டடங்கள் கட்டப்பட்டது எப்படி? அரசு வழங்கிய 44.3 ஏக்கர் பட்டா நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த ஏழை எளிய மக்கள் விரட்டப்பட்டது எப்படி?

2005ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை, 11973 சதுர மீட்டர் பரப்பளவு விளை நிலம் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது சாமியார் ஜக்கியால்.

இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குற்றவாளியின் அழைப்பின் பெயரில் அவர் நடத்தும் விழாக்களுக்கு பிரதமர் வருகிறார் - குடியரசுத் தலைவர் வருகிறார் - மாநில முதல் அமைச்சர் வருகிறார் - அந்த ஜக்கி சாமியாரிடம் ஆசீர்வாதம் பெறுகிறார்கள் என்றால் இந்த  அவலத்தை என்ன சொல்ல? இந்த செல்வாக்கைப் பயன்படுத்தி மேலும் அத்துமீறல்கள் தானே நடக்கும்? நடப்பது கார்ப்பரேட் சாமியார் ஆட்சிதான் என்பதற்கு இதை விட அப்பட்டமான சாட்சியம் வேறு தேவையா?

- கலி. பூங்குன்றன்-

No comments