கைவிடப்பட்டது மன்னார் புதைகுழி!

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வை இடைநிறுத்துமாறு மன்னார் நீதிவான் நீதிமன்று இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

எதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்வரை அகழ்வுப் பணிகளை இடைநிறுத்துமாறு நீதிமன்று இந்த உத்தரவை வழங்கியது.

மன்னார் – சதொச கட்டட வளாகத்தில் மனிதப் புதைக்குழியிலிருந்து நேற்று வரை 342 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 29 மனித எச்சங்கள் சிறுவர்களுடையது என்று சட்ட மருத்துவ நிபுணர் தெரிவித்தார்.
மன்னார் மனிதப் புதைக்குழியின் அகழ்வுகள் இன்று 156ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மன்னார் மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை கொண்டு நடத்தப்பட்ட சோதனையின் அறிக்கை, மன்னார் நீதிவான் நீதிமன்றத்தினால் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டிருந்தது.

மன்னார் மனிதப் புதைக்குழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானது என அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தினால் (Beta Analytic Radiocarbon Dating Laboratory) நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனையின் மூலம் வெளியாகியது.

அதன்படி, இந்த மனித எச்சங்கள் கி.பி 1499 – 1719ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்ட காலத்திற்கு உரித்துடையது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலையில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இந்த அகழ்வுப் பணி தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்புகள் கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் வரை மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை இடைநிறுத்துமாறு மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments