மாகாண அதிகாரங்களை பறிக்கிறாரா சுரேன் இராகவன்!


வடமாகாண கல்வி அமைச்சின் கீழுள்ள பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் தேசிய பாடசாலைகளாக்கும் வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவனின் நடவடிக்கைகளுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முழு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.அத்துடன் அதனை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மாகாண சபைகளின் நடவடிக்கைகள் நாடு முழுவதும் தற்போது இல்லாத நிலையில் மாகாணங்களை நிர்வகிக்கின்ற ஆளுநர்கள் மாகாணங்களின் இறைமைகள் பாதிக்கப்படும் விதத்தில் மாகாணப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்க முயற்சிப்பது பொருத்தமான நடவடிக்கை அல்ல.ஏற்கனவே மாகாணங்களில் உள்ள தேசிய பாடசாலைகள் பல்வேறு சீரழிவுகளுக்கு உட்பட்டுள்ளன. என்பதனையும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உதாரணமாக வடபுலத்தில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் பல பாடத்துறைகளுக்கான ஆசிரிய பற்றாக்குறை உள்ளது. இதனைச் சீர்செய்ய நாம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அவை சீர் செய்யப்படவில்லை. இதைவிட மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களை அப்பாடசாலைக்கு விடுவித்து அப்பாடசாலையின் ஆசிரிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மாகாணக் கல்வி அமைச்சுக்கு முன்வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று திருகோணமலையில் உள்ள பிரபல ஆண்கள் தேசிய பாடசாலையில் பல பாடங்களுக்கான ஆசிரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்ய நாம் முன்வைத்த கோரிக்கைக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. உடனடியாக அப்பாடசாலைக்கு பொருத்தமான ஆசிரியர்களை விடுவிக்கும்படி கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

இது ஒருபுறம் இருக்க தேசிய பாடசாலைகளாக்கப்பட்ட பல மாகாணப் பாடசாலைகள் பல்வேறு வசதியீனங்களோடு இங்குவதும், புகழ் பூத்த பழைய மாணவர்களைக் கொண்ட வசதியான பாடசாலைகள் மட்டும் தமது தனித்துவத்தை இழக்காது புகளோடு இருக்க வேண்டுமென்பதற்காக அந்தப் பழைய மாணவர்கள் தமது உழைப்பைப் கொடுத்து பாதுகாத்து வருவதும் யாவரும் அறிந்ததே.

அத்தகைய நடைமுறைகள் எத்தனை பாடசாலைக்குக்கும் பொருத்தும் என எவரும் சிந்த்துத்துப்பார்ப்பதில்லை. அதிலும் பல பெண்கள் பாடசாலைகளுக்கு அத்தகைய வாய்ப்புகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது. மாகாணப்பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக ஆக்கி விட்டால் ஏதோ பாடசாலையின் தரம் உயர்த்துவதாக கருதப்படுகின்றது.

ஆகையினால் மாகாணங்களின் இறைமைகள் பாதுகாக்கப்படுவதோடு ஒரு பிரதேசத்தில் உள்ள மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்களை வேறாக்காது ஒரு அமைச்சின்கீழ் இயங்கச் செய்யும் நடைமுறையை ஒட்டுமொத்தமாக உருவாக்க வேண்டும் என சங்கம் வலியுறுத்தி நிற்கின்றது.

இதைவிட அதிபர் நியமனம், ஆசிரியர் நியமனம், ஆசிரியர் இடமாற்றம் என்பவற்றில் மாகாணக் கல்வி அமைச்சிற்கு தொடர்ந்தும் தலையிடியாக உள்ளவை இந்தத் தேசிய பாடசாலைகளின் நிர்வாகக் கட்டமைப்புகளும், அதன் நடைமுறைகளுமே.
மாகாணங்களில் கல்வி நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான ஒரே முறையில் கையாளப்படவேண்டும் என்பதற்காகவும், பிள்ளைகளிடத்தே, ஆசிரியர்களிடத்தே வேற்றுமைகளை ஏற்படுத்தாத விதத்திலும் மாகாணப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும் எத்தனைங்களைக் கைவிடவேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.       


No comments