மன்னார் சம்பவம் - 9 பேர் கொண்ட குழு அமைக்கும் ஆளுநர்


இந்து குருக்கள் சபையின் தலைவர் சிவஸ்ரீ கே.வீ.கே. வைத்தீஸ்வரக் குருக்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (04) முற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் வடமாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

மேலும்  மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் கவனம் செலுத்திய ஆளுநர் , இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில் அனைத்து மதங்களினுடைய பிரதிநிதிகள் குழுவொன்றை ஸ்தாபித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதனூடாக இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த குழுவில் இந்து மதத்தை சேர்ந்த மூன்று (3) பேர், கத்தோலிக்க மதத்தை சேர்ந்த மூவர் (3) , பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் (1) ,  அரச அதிபர் சார்பில் ஒருவர் (1) மற்றும் பொது அமைப்பை சேர்ந்த ஒருவர் (1) உள்ளடங்கலாக மொத்தம் ஒன்பது (9) பேர் கொண்ட குழு ஸ்தாபிக்கப்படும் என்று  ஆளுநர் குறிப்பிட்டார்.

இதன்போது சிவஸ்ரீ கே.வீ.கே. வைத்தீஸ்வரக் குருக்களினால்   இந்து  ஒளி சஞ்சிகை மற்றும் நந்திக்கொடி ஆகியன ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதுடன் ஆசீர்வாதங்களையும் வழங்கினார்.

இந்த சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் அவர்கள் கலந்துகொண்டார்.

No comments