கோத்தா தான் ஜனாதிபதி வேட்பாளர் - மகிந்த அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை நிறுத்துவதற்குக் பொது எதிரணி தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.

இதனையடுத்து ‘மொட்டு – கை’ கூட்டு முயற்சிகள் முற்றாகக் கைநழுவின என்றும் தெரியவந்தது.

ராஜபக்ச குடும்பத்தினரின் ஏகோபித்த ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு பொது எதிரணியின் சிரேஷ்ட பிரமுகர்கள் பலர் தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கக்கோரும் விண்ணப்பத்தைக் கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்திருந்தார்.

அதன் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்காக அடுத்த வாரம் அவர் அமெரிக்காவுக்கும் பயணமாகின்றார்.

இந்நிலையிலேயே, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபயவை மஹிந்த களமிறக்குவதற்கு உறுதியாக முடிவெடுத்திருக்கின்றார் என தகவல்கள் கசிந்துள்ளன.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் சார்பில் யார் வேட்பாளராகப் போட்டியிடுவது என்ற சர்ச்சை நீடித்து வந்த நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூட்டு இணைந்து செயற்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் முற்றுப் பெற்றுவிட்டன என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments