சி.வி ஜெனீவாவில் மீள இன அழிப்பினை நினைவூட்டுவார்!


ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசம் கொடுப்பதால், எதுவும் நடந்துவிடாதென தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா, கால அவகாசம் வழங்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் கால அவகாசம் வழங்குவதே நல்லது என கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் கூறுகின்றார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தான் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல பகிரமங்கமாகவே தெரிவித்துள்ளார்.

பொறுப்புக் கூறல் தொடர்பான இந்த நாடுகளின் தீர்மானத்தை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளவுள்ளதாக மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜெனீவா செல்லவுள்ள முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் மாற்றுத் தலைமைக்குரிய பண்புகளுடன் இயங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேவேளை, ஜெனீவா மனித உரிமைச் சபையின் விதப்புரைகளின் பிரகாரம் பேர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பித்தல், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் நேர்மையுடன் பொறுக்கூறல் என்ற அடிப்படையில்தான் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைத் தகவல்கள் கூறுன்றன.

ஆனால் வெறுமனே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் என்ற கோசத்துடன் மாத்திரம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான கால அவகாசத்தை ரணில் அரசாங்கம் பயன்படுத்தி ஈழத் தமிழரின் அரசியல் பிரச்சினையின் உண்மையான தோற்றத்தை திசை திருப்பி விடும் என விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான இடதுசாரி முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த நிலையிலேதான் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜெனீவாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் நடந்தவை இன அழிப்பு என்று வடமாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியவர் விக்னேஸ்வரன். ஆனால் ஜெனீவாவுக்குச் சென்று விளக்கமளிக்கும்போது வடமாகாண சபையின் தீர்மானத்தை மனித உரிமைச் சபையின் உயர் அதிகாரிகளிடம் கையளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக அனந்தி மற்றும் சிவாஜிலிங்கம் ஊடாக நேரடியாகவும் பின்னர் தபால் மூலமாக வடமாகாணசபையாலும் தீர்மானப்பிரதிகள் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேரடியாக அவர் தீர்மான பிரதியை மீள தானே கையாளிப்பாரென அவருடன் தொடர்புடைய தரப்புக்கள் கூறுகின்றன.

இதனிடையே வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி அதிகாரமே ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என விக்னேஸ்வரன் உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை வரைபு ஒன்றை தயாரித்து வெளியிட்டிருந்தது.

இதனடிப்படையிலேயே சி.வி.விக்கினேஸ்வரனின் நகர்வுகள்  முன்னெடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments