விடுவிக்காவிடின் உயிர் துறப்போம்!


கணவரின் விடுதலை குறித்து சர்வதேசம் கவனத்தில் கொள்ளவில்லை என்றால் எனது ஐந்து பிள்ளைகளுடன் நான் நஞ்சருந்தும் நிலையே ஏற்படும் என  முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி தெரிவித்துள்ளார்.
அண்மையில் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலையறவு பொலிஸ் சோதனைச்சாவடியில்   இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டிருந்தனர்.இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறி தேசத்தின் வேர்கள் அமைப்பின் முன்னாள் போராளி அஜந்தன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் அடிப்படையில் ஜனாதிபதியின் விசேட அனுமதியின் பேரில் 90 நாட்கள் அவரிடம் பொலிஸ் தடுப்பு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.  எனினும் அவரை கைதுசெய்து கடந்த 04.03.2019 ஆம் திகதி 90 நாட்கள் முடிவடைந்த நிலையில் அஜந்தன் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை .
05 ஆம் திகதி நீதிமன்றில் பாரப்படுத்துவதாக கூறினர். ஆனால் அவரை அங்கு கொண்டுவரவில்லை. மீண்டும் ஒருமாத காலப்பகுதி தடுப்பு விசாரணைக்கான காலக்கெடு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, 90 நாட்கள் தடுப்பு விசாரணையின் போது கடிதம் மூலமாக அறிவித்திருந்தனர்.  ஆனால் இம்முறை எழுத்துமூலமாக கொடுக்கவில்லை என்றும்  தற்போது எனது கணவரை கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறுகின்றதாகவும் அஜந்தனின் மனைவி கூறியுள்ளார் .
இந்நிலையில் இது தொடர்பாக நான் மனித உரிமை ஆணைக்குழு, செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றிடம் அறிவித்துள்ளேன். அவர்கள் இதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் எந்த பிழையும் செய்யாத எனது கணவரை மீண்டும் தடுப்புக்காவலில் வைத்திருந்தால் நானும் எமது ஐந்து பிள்ளைகளும் ஜனாதிபதி அலுவலகம் அல்லது பொலிஸ் நிலையத்தின் முன்பாக நஞ்சருந்தும் நிலை ஏற்படும் என்றும், ஆகையினால் எனது கணவரின் விடுதலை குறித்து சர்வதேசமும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையேல் எனது ஐந்து பிள்ளைகளுடன் நஞ்சருந்தும் நிலையே ஏற்படும் எனவும் அஜந்தனின் மனைவி கே. செல்வராணி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments