கிழக்கிலும் மக்கள் அலையை திரட்ட சி.வி முயற்சியா?


கிழக்கு மாகாணத்தில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் திறந்துள்ள அரசியல் முனை கூட்டமைப்பிற்கு தர்மசங்கடமாகியுள்ளது.

இதுவரை காலமும் போதிய அரசியல் போட்டியின்றியிருந்ததுடன் அரசுடன் ஒத்தோடி அரசியலையே கூட்டமைப்பு செய்துவந்திருந்தது.

இந்நிலையில் இரு வேறு சமூகங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் கிழக்கு மக்களின் நிலைமை பாரதூரமான நிலையில் இருக்கின்றது. எமது மக்கள் 300 க்கும் அதிகமான தமது பூர்வீகக் கிராமங்களை முற்றாக இழந்துவிட்டார்கள். தொடர்ந்தும் அவர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம், அரசியல் ஒற்றுமை என்பவற்றைக் காரணம் காட்டி எமது அரசியல் தலைமைகள் இந்தப் பிரச்சினைகளைத் தட்டிக் கழித்து வருகின்றார்கள் என்று மக்கள் என்னிடம் குறை கூறினார்களென வடக்கு முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதியே கிழக்கு மாகாணத்துக்கு வந்த நான் அம்பாறை மற்றும் மட்டக்களப்பின் பல இடங்களிலும் மக்கள் சந்திப்புகள் பலவற்றை நடத்தி இங்கு வாழும் தமிழ் மக்களின் குறைகள், கவலைகள், கஸ்டங்கள் ஆகியவற்றைக் கேட்டறிந்துள்ளேன். தமிழ் மக்களின் போராட்டத்துக்கு அளப்பெரும் தியாகங்களையும் மகத்தான பங்களிப்பையும் செய்துள்ள கிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்தும் பெரும் இன்னல்கள் மற்றும் அடக்குமுறைகளின் கீழ் வாழ்ந்துவருவதை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.

நில ஆக்கிரமிப்பு, காணாமல் போனவர்களின் குடும்ப நிலை, கணவன்மார்களை இழந்த பெண்கள் நிலை, வேலை இல்லா நிலைமை என்று பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் அவர்கள் வாழ்ந்துவருவதைக் கண்டு மனம் நொந்துபோயுள்ளேன். இரு வேறு சமூகங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் இங்குள்ள மக்களின் நிலைமை பாரதூரமான நிலையில் இருக்கின்றது. எமது மக்கள் 300 க்கும் அதிகமான தமது பூர்வீகக் கிராமங்களை முற்றாக இழந்துவிட்டார்கள். தொடர்ந்தும் அவர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம், அரசியல் ஒற்றுமை என்பவற்றைக் காரணம் காட்டி எமது அரசியல் தலைமைகள் இந்தப் பிரச்சினைகளைத் தட்டிக் கழித்து வருகின்றார்கள் என்று மக்கள் என்னிடம் குறை கூறினார்கள். எமக்கான நியாயமான உரித்துக்கள் தொடர்பில் குரல் எழுப்புவதற்கு நாம் பின்நிற்கத் தேவை இல்லை. அதேசமயம் ஏனைய சமூகங்களின் உரிமைகளை மறுக்கும் வகையிலும் நாம் செயற்படத்தேவை இல்லை. சமூகங்களின் சுமூகம் என்பது ஒரு சாராரின் தலைமைகள் நித்திரைக்குப் போகும் நிலையை ஏற்படுத்தக்கூடாது.

கிழக்கு மாகாணத்தில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதில் நாம் மூலோபாயங்களை வகுத்து செயற்படவேண்டும். இதில் புலம்பெயர் தமிழ் மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வட மாகாணத்தை விடவும் பெருந் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்கள் தான். ஆயுத ரீதியான போராட்டம் நடைபெற்றபோது கிழக்கு மாகாண மக்கள் செய்துள்ள பங்களிப்பை நான் கேள்விப்பட்டுள்ளேன். அவர்கள் அரசியல் ரீதியாக மேற்கொண்ட பங்களிப்புக்களை நான் நீதிபதியாக இங்கு கடமையாற்றிய காலங்களில் நேரடியாகக் கண்டுள்ளேன். செழிப்பும் வளமும் மிக்க கிழக்குத்தான், நாளை நாம் வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு சுய நிர்ணய அடிப்படையிலான தீர்வினைப் பெறும்போது எமக்குச் சுபீட்சமான எதிர்காலத்துக்கான அத்திவாரமாக அமையமுடியும்.

இதனைச் சாத்தியமானதாக்க வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து நாம் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும். நான் அடிக்கடி இங்கு வந்து இங்குள்ள மக்களைச் சந்திக்கவிருக்கின்றேன். மக்களாகிய நீங்கள் என்னையோ அல்லது எனது கட்சி முக்கியஸ்தர்களையோ எந்நேரத்திலும் தொடர்புகொண்டு உங்கள் பிரச்சினைகள், எதிர்பார்ப்புக்கள் பற்றிக் கூறலாம். அவற்றைத் தீர்க்க நாம் எம்மால் ஆனமட்டில் முயற்சி செய்வோமென முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments