அலெக்சாண்டர் பவுஸ்ரின் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு!

பிரான்சில் நடைபெற்ற அனைத்து விடுதலைக்கான செயற்பாட்டிலும் பவுஸ்ரின் அவர்களின் ஒப்புவிப்பும் உழைப்பும் இணைந்திருக்கின்றன. எமது எதிர்கால தலைமுறையினரின் நேரிய வாழ்வில் அக்கறை கொண்டிருந்தவர். அவர்களுக்காக தமிழ்ச்சங்கங்களையும், தமிழ்க்கல்விச் சோலைகளையும் அமைப்பதில் பெரும்பங்கெடுத்தவர். எப்போதும் பேச்சிலும் மூச்சிலும் தாயகத்தின் விடுதலை நினைவையே தாங்கிநின்றவர்.
இந்தவகையில் இவரது ஆற்றலும், ஆளுமையும், தாயகப்பற்றுறுதியும் எப்போதும் திடமானவை. லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோருடன் மிகவும் நெருக்கமாகவும் உற்ற துணையாகவும் இருந்து பணியாற்றினார். தாயகத்தில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கும், செயற்பாட்டாளர்களுக்கும் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. அவ்வேளைகளிலெல்லாம் மனச்சோர்வின்றி எடுத்த பணிகளில் தளராது பணியாற்றியவர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புலம்பெயர்மண்ணில் தன்னையும் இணைத்து உணர்வுடனும், என்றும் உறுதிதளராத மனதுடனும் இறுதிவரை பணிசெய்த உன்னத தேசப்பற்றாளனை எம் தேசம் என்றும் போற்றி நிற்கும் என்பது திண்ணம். பவுஸ்ரின் அவர்கள் சாவடைந்துவிட்டார் என்ற செய்தி தமிழ்மக்கள் மனதில் ஆற்றவொண்ணாத் துயராக நிலைத்துள்ளது.
பாசமும், நேசமும், பற்றும், பண்பும் என எங்கள் எல்லோருடனும் ஒன்றித்திருந்தவரை இன்று இழந்து நிற்கின்றோம். இவரின் இழப்பு அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல தாயகத்தை நேசிக்கின்ற அனைவருக்குமே துயரமளிப்பது. துன்பதுயரங்கள் வருத்தியபோதும் தளராமல் முன்னின்று, தாயகவிடுதலைக் கனவோடு பணியாற்றிய அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்ப உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் உறவினருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக்கொள்ளும்.
அதேவேளை இவராற்றிய தமிழீழத் தேசப்பணிக்காக இவரை ‘நாட்டுப்பற்றாளர்|| என மதிப்பளிக்கின்றோம்.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

Post a Comment